12 Nov 2017

வெலிக்கந்தை விபத்தில் ஒருவர் மரணம் இ.போ.ச பயணிகள் பஸ் குடைசாய்ந்ததில் 09 பேர் படுகாயம்

SHARE
கண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை ரிதிதென்ன சாலைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் சனிக்கிழமை மாலை 11.11.2017 வெலிக்கந்தை – நாமல்கம பிரதேசத்தில் குடைசாய்ந்ததால் அதில் பயணம் செய்த சாரதி நடத்துனர் உட்பட சுமார் 09 பேர் படுகாயமடைந்ததாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் இருவர் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை அதே இடத்தில் ஏக காலத்தில் நடந்த வேன்-சைக்கிள் மோதுண்ட பிறிதொரு விபத்தில் சைக்கிள் பயணி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து பிற்பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பு  நோக்கிப் புறப்பட்டு இந்த பஸ் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியாக வெலிக்கந்தையூடாச் சென்று கொண்டிருக்கும்போது மாலை 6.20 அளவில் பஸ் வீதியிலிருந்து விலகி குடைசாய்ந்தது.

இவ்வேளையில் உதவிக்கு விரைந்த பிரதேச வாசிகளால் பஸ்ஸிலிருந்த சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் மீட்டெடுக்கப்பட்டதோடு காயமடைந்தவர்கள் அருகிலிருந்த வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலொன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே இந்த பஸ் விபத்துக்குள்ளான அந்த இடத்தில் ஏற்கெனவே வேன் ஒன்று சைக்கிளில் சென்றவரை மோதியதில் சைக்கிளில் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

அந்த வேளையில் வேன் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸில் மோதுவதற்கு நெருங்கியபோது பஸ் சாரதி வீதி மருங்கில் பஸ்ஸை செலுத்தியுள்ளார்.

இதன்போதே பஸ் குடைசாய்ந்ததாக ரிதிதென்ன சாலை முகாமையாளர் ஏ.எம். ஜவ்பர் தெரிவித்தார்.

இவ்விபத்துக் குறித்து வெலிக்கந்தைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: