மட்டக்களப்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வன்முறைகளைத் தோற்றுவிப்போர் மீது நடவடிக்கை எடுக்காது நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது என ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, கிரான், செங்கலடி, கொக்குவில் மற்றும் களுவாஞ்சிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று விரும் விரும்பத்தகாத தமிழ் முஸ்லிம் சமூக ஐக்கியத்திற்கெதிரான் இன வெறுப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம்பற்றிக் கேட்டுக் கொள்ளும் ஊடகவியாளர் சந்திப்பில் திங்க்ட்கிழமை 30.10.2017 இரவு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
ஏறாவூர் நகரசபையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேள அதியுயர்பீட அங்கத்தவர்கள் சமுகமளித்திருந்தனர்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சம்மேளனத் தலைவர் விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித் மேலும் கூறியதாவது@
சகவாழ்வைக் கெடுத்து மீண்டும் இந்த நாட்டில் குழப்பத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்த முனைந்து நிற்கும் தீய சக்திகளின் நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.
பொலிஸார் இந்த நாட்டிலுள்ள சட்டதிட்டங்களை மதித்து இன மத வேறுபாடின்றி தமது கடமையைச்; செவ்வனே செய்ய வேண்டும்.
அதன் மூலம்தான் இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்குமான பாதுகாப்பை வழங்க முடியும்.
2007ஆம் ஆண்டுக்ககுப் பின்னர் இந்த நாட்டிலே துளிர்விடத் துவங்கிய சமாதானத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் முஸ்லிம் உறவு காத்திரமானதாக உறுதியானதாக கட்டியெழுப்பப்பட்டு வருவதை நாங்கள் காண்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் புரியும் இடங்கள், கல்விக் கூடங்கள் பல்கலைக் கழகங்களில் இன வேறுபாடுகள் இல்லாமல், மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் புரிந்துணர்வோடும் பணியாற்றுகின்ற ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்து வருகின்றது.
1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இன உறவை மீண்டும் பெற்றுக் கொண்டோம் என்ற மகிழ்ச்சியில் சமூகங்கள் இரண்டறக் கலந்து வாழ்கின்றபோது இந்த மாவட்டத்திலே இருக்கின்ற ஒரு சில தீய சக்திகள் இன நல்லுறவையும் சகவாழ்வையும் சீர்குலைத்து தங்களது நலன்களை அடைந்து கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்பதை அறியக்கூடியதாகவுள்ளது.
சமாதானத்தை, இன ஐக்கியத்தை, அபிவிருத்தயை விரும்பும் தமிழ் முஸ்லிம் மக்கள் இவ்வாறு விஷம சக்திகளினால் ஏற்படுத்தப்படும் இனவெறுப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.
ஏறாவூர் நகருக்கு தினமும் சுமார் 2 ஆயிரம் தமிழ் சகோதர சகோதரிகள் தமது தொழில்களுக்காக வருகின்றார்கள்.
அவர்களது நாளாந்த உழைப்பின் மூலம் ஜீவனோபாயத்திற்கான பல இலட்சக் கணக்கான ரூபாய் பணம் ஈட்டப்படுகின்றனது.
இதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் தமது தொழிலுக்காகவும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காகவும் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் செல்கின்றார்கள்.
ஏறாவூர் நகரின் எல்லாப் பகுதிகளிலும் தமிழ் சகோதரர்கள் தமது வழமையான அலுவல்களில் எந்தவித அச்ச உணர்வோ பயமோ, பீதியோ அற்ற நிலையில் சுதந்திரமாகவும், உரிமையுடனும் தொடர்ந்தும் ஈடுபடலாம் என்பதையும் அதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் ஏறாவூர் சமூகம் அளிக்கின்றது.
எனவே, தமிழ் முஸ்லிம் சமூகங்களிலுள்ள இன ஐக்கியத்தை விரும்பும் அத்தனை நல்லுள்ளங்களையும் இந்த விடயத்தில் இணைந்து பணியாற்றுமாறும் சமூக உறவைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுமாறும் வீணான குழப்பங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்குமாறும் நாம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
கடந்த கால யுத்ததத்தினால் நாம் இழந்த சமாதானம், கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி என்பன மீண்டும் முழு வீச்சில் இடம்பெற புரிந்துணர்வான தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அவ்வப்போது விஷமிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகளால் இயல்பு நிலை சீரழிந்து போவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
அரசாங்கமும் காவல்துறையும் இந்த விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டும். முகநூல்களின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற இனவெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment