மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக சறோஜினிதேவி சார்ள்ஸ் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திங்கட்கிழமை 02.10.2017 தனது உத்தியோகபூர்வக் கடமைகளை பொறுப்பேற்றார்.
கொழும்பில் உள்ள பிரதான சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
இந்த கடமையேற்பு நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தனர்.
நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கு அமைய இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது.
இதுவரை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட சூலாநந்த பெரேரா அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சறோஜினிதேவி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சுங்கத் திணைக்களத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என்று குறிப்பிடப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக 2012 முதல் பணியாற்றிய சறோஜினிதேவி மாவட்ட அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் வீதி, விவசாய, மீன்பிடி, உட்கட்டமைப்பு, வீடமைப்பு, மீள்குடியேற்றம், நீர்ப்பாசனம் போன்ற திட்டங்களுக்கு அவர் அளப்பெரும் பங்காற்றியிருந்தார்.
ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் குறைபாடுகளை சேகரித்து பல மில்லியன் நிதிகளை கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment