மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரிவோர் மற்றும் இன்னபிற தொழில்களைச் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து தீர்வு தேடித்தர ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு ஆண் பெண் தொழிலாளர்களின் குடும்பங்கள் தெரிவிக்கையில், இணக்கச் செயன்முறை வசதிகளை மட்டக்களப்பிலுள்ள மாவட்டக் காரியாலயத்திற்கும் பன்முகப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரும்பாலான மாவட்டங்களில் பன்முகப்படுத்தப்பட்ட அடிப்படையில் செயற்பட்டு வரும் அதேவேளையில், மனக்குறைகளை தீர்;த்து வைக்கும் விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததும் அதற்கான விசாரணைக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே விசாரணைக்காக கொழும்பிற்கு செல்பவர்கள், மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அதனால் பலர் விசாரணைகளுக்காகவும் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கொழும்புக்கு அலைய வேண்டியதன் சிரமத்தை உணர்ந்து பேசாமல் இருந்து விடுகின்றார்கள்.
விசாரணைக்காக கொழும்பிற்கு செல்பவர்கள் பலதடவைகள் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும், துணைக்காக ஒருவரை ஆயத்தப்படுத்த வேண்டும், பெண்கள் ஆண்களின் துணையுடன் செல்லும்போது குடும்ப பிரச்சினைகள் ஏற்படுகின்றன, பிள்ளைகளை மற்றவர்களின் பராமரிப்பில் விட்டுச் செல்ல பாதுகாவலரை ஆயத்தப்படுத்த வேண்டிய கட்டாயம், இதனால் பிள்ளைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றமை, துணைக்காக கூட்டிச் செல்பவருக்கு கூலி வழங்க வேண்டியுள்ளமை. விசாரணைக்கு செல்பவரின் நாளாந்த வருமானத்தை இழக்க வேண்டிய நிலை, கால்நடைகளை வைத்திருப்பவர் விசாரணைக்குச் செல்வதினால் கால்நடைகளைப் பராமரிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள்.
விசாரணைக்கு அழைக்கப்படும் தினத்தில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பஸ் அல்லது புகையிரதத்தில் பயணம் செய்ய போதியளவு ஆசன வசதியின்மையினால் ஏற்படும் பாதிப்பு, இரவுப் பயணத்தின் போது தூக்கமின்மை, அசௌகரியம் போன்ற உடல் உள உபாதைகள், கொழும்பு விசாரணையின் போது சரியான விடயங்களைத் தெளிவுபடுத்த முடியாதளவு மொழிப்பிரச்சினைக்கு உள்ளாதல் இப்படி பலவேறுபட்ட சொல்லொண்ணாத் துன்பங்களை பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் அனுபவிக்கின்றன.
எனவே மனக்குறைகளை கையாளும் பொறிமுறை (இணக்கப் பொறிமுறை) வாய்ப்பு மட்டக்களப்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட காரியாலயத்திலும் பெறக் கூடிய ஏற்ற ஒழுங்குகளை அரசாங்கம் செய்து தர வேண்டும்.
போதியளவு அலுவலக உத்தியோகத்தர்கள், மற்றுமுள்ள சகல தொடர்பாடல் வசதிகள், என்பனவும் மாவட்டக் காரியாலயத்திற்கு செய்து தரப்பட வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்” என்றனர்.
இது விடயமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபடும் கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் (Eastern Self Reliant Community Awakening Organisation) உட்பட பல்வேறு அமைப்புக்களிடம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வேண்டுகோளை முன் வைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். ஸ்பிரிதியோன் (Spiritheyon) தெரிவித்தார்.
4 அலுவலர்களுடன் மட்டும் இயங்கும் மட்டக்களப்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகளுடன் புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர் நாளாந்தம் வருகை தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment