17 Oct 2017

வடக்கு கிழக்கிலுள்ள வறிய மக்கள் நுண்கடன் சுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என கதறியழும் நிலை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன்

SHARE
வடக்கு கிழக்கிலுள்ள வறிய மக்கள் நுண்கடன் சுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என கதறியழும்  நிலை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட தன்னார்வ அமைப்புக்களின் சமூக மட்டப் பிரதிநிதிகளுக்கு நுண்கடன் நிதி வழங்கலின்போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், நிதிசார் முகாமைத்துவம் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கக் கட்டிடத்தில் திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்றது.
அதில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@
சமீபத்தில் மத்திய வங்கி ஆளுநர் வடபகுதிக்குச்  சென்றபோது அங்கு நுண் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மத்திய வங்கி ஆளுநரைச் சூழ்ந்து கொண்டு நுண்கடன் சுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றி வாழ்வளியுங்கள் என மன்றாட்டமாகக் கேட்டு கதறியழுதுள்ளார்கள்.

இது ஒரு பரிதாபகரமான அதேவேளை சீர் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலைமை.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலேதான் இந்த வறுமை, நுண்கடன் தொல்லை, பாலியல் துஷ்பிரயோகம்,  போலி நாணயத் தாள்களின் புழக்கம் என்பன உண்டு.

பெண்களை மையமாகக் கொண்டுதான் இத்தகைய சமூக விரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக இத்தகைய நிலைமைகளினால மிக மோசமாக மீள முடியாதளவு பாதிக்கப்படுபவர்கள் பெண்களாவே உள்ளார்கள் என்பது கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

ஒரு பெண் நிதி வழங்கும் 7 நிறுவனங்களிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் நுண்கடன் பணம் பெற்றிருக்கின்றார். ஓலைக் கொட்டிலில் வாழும் அந்தக் குடும்பப் பெண் நிதி அறவீட்டு நிறுவனத்திடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிணற்றுக்குள் இறங்கி பல மணி நேரம் மறைந்திருந்ததோடு இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தவிர்த்திருக்கப்பட வேண்டியது.

இரண்டு பிள்ளைககை; கொண்ட அந்தத் தாய் கடன் பெற்றதில் அந்தக் குடும்பம் எந்தவிதமான முன்னேற்றத்தைக் கண்டதில்லை.

கடைசியாக கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பது துரதிருஷ்டவசமானது.

தொடர்ச்சியாக இந்த மாதிரியான சமூக அழிவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு,  மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 4 மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பெற்று மிகக் கொடிய வறுமையான மாவட்டங்களாக உள்ளன. ‪

ஆகவே, கூடுதலான சீர்கேடுகளும் பின்னடைவுகளும் வடக்கு கிழக்கிலே உள்ள மாவட்டங்களிலேதான் நடக்கின்றன.

கடன்கள் மீளச் செலுத்தவில்லை என்ற காரணத்தினால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்ற விவரமும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பபெற்றது.

அதன்பின்னர் எந்தவொரு வங்கியாளரும் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று கடன் அறவீடுகளில் ஈடுபடக் கூடாது என மத்திய வங்கி அறிவித்தல் வெளியிட்டது.

இவ்வாறு எத்கைய பாதிப்புக்கள் இடம்பெற்றாலும் அதற்கு முழுமுதற் காரணமாக நாம்தான் இருக்கின்றோம். எனவே, குறிப்பாக வறிய மக்கள் அழிவுகளைத் தவிர்த்து தமது அபிவிருத்தி தொடர்பாக விழிப்படைய வேண்டும்.” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: