நாடுமுழுக்க நாங்கள் சிலைகளை நிறுவிக்கொண்டு போவதற்குப் பதிலாக உள்ளத் தூய்மையை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர்
நாடுமுழுக்க நாங்கள் சிலைகளை நிறுவிக்கொண்டு போவதற்குப் பதிலாக உள்ளத் தூய்மையை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலை விழாவும் வியாழக்கிழமை 05.10.2017 மட்டக்களப்பு சுவாமி விபுலாந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றபோது அதன் பணிப்பாளர் தொடக்கவுரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@
சுவாமி விபுலாநந்தர், ஆபிரஹாம் பண்டிதர் ஆகியோர் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் பரந்த அளவில் உலகம் தழுவிய ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
அது ஆளுமைகளின் கொண்டாட்டமான காலமாக இருந்தது. சுவாமி விபுலாநந்தர் ஆபிரஹாம். பண்டிதர், தனிநாயகம் அடிகளார் இவ்வாறு ஒரு தலைமுறை அறிஞர்கள் உலகம் தழுவிய ரீதியில் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் விளைவாக தமிழiயும் அறிவுப் பலத்தையும் விசாலித்திருக்கின்றார்கள்.
இதன் தொடர்ச்சியை சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது எங்கள் முன்னாலுள்ள மிக முக்கியமான ஒரு கேள்வியாகும்.
இப்பொழுது நாடு முழுக்க பல சிலைகளை நாங்கள் நிறுவிக்கொண்டு போகின்றோம்.
ஆயினும், இந்தச் சிலை நிறுவல் பாதுகாப்புக்கு மிகவும் இடைஞ்சலானது என்று பொலிஸார் தங்களது அறிக்கைகள் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்று சுவாமி விபுலாநந்த அடிகளார் கூறிய அருள்வாக்குத்தான் எங்கள் முன்னாலுள்ள தேவையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையுமாகும்.
எமது மூதாதையரான அறிவுப் போராளிகள் தங்களைத் தியாகம் செய்து சுயநலம் மறந்து இதனைத்தான் செய்தார்கள்.
அவர்கள் பெரிய அறிவுச் சமர் செய்தார்கள்.
அதனை நாம் முன்னெடுக்க வேண்டும். அதன் தொடராக இது தொடர்ந்தால் நல்லது.
நடைமுறையில் இதனை நாம் செய்தாக வேண்டும்.
யாழை சிற்பமாகவோ, உருவமாகவோ வைத்துப் பாதுகாப்பதால் எந்தப் பெருமையும் நமக்குக் கிட்டப்போவதில்லை. யாழை வாசிக்க வேண்டும். கலைஞர்களை உருவாக்க வேண்டும்.
இந்து கலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சரான செல்லையா இராஜதுரை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவகம் மேலும் பல கலைஞர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
தரமான இளம் வீணை இசைக்கலைஞர்களை நாம் தாராளமாக உருவாக்க வேண்டும். அருவிக் கொண்டு வரும் புல்லாங்குழல் கலைஞர்களையும் உருவாக்க வேண்டும்.
கலை நிறுவனங்கள் இல்லாத காலகட்டத்தில் நாங்கள் கலைகளில், அவற்றைப் பாதுகாப்பதில் மேலும் வளர்ப்பதில், பெருமை சேர்ப்பதில் கொடி கட்டிப் பறந்தோம். எமது பாரம்பரியக் கலைகளின் பெருமை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அப்போதெல்லாம் சிலாகித்துப் பேசப்பட்டது.
அந்த நிலைமையை மீண்டும் நாம் கொண்டு வர வேண்டும்.
ஆற்றுகைகளையும் அத்தாட்சிப் பத்திரங்களையும் மையப்படுத்தியதாக எமது கல்வி இருப்பதன் காரணமாக எங்களால் ஆற்றுகையாளர்களை உருவாக்குவது மிகவும் சிரமமானதாக இருக்கின்றது.
பட்டங்களைக் கொண்டு பட்டங்களை உருவாக்கும் செயற்பாடே நடந்து கொண்டிருக்கின்றது.
இது சார்ந்து நாங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பிரேரணைகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம்.
இத்தகைய காலத்தால் அழியாத பணிக்கு சமூகம் சார்ந்த அறிஞர்கள் மற்றும் பொறுப்பாளர்களினதும் பங்களிப்பு இன்றியமையாததமாகும்.” என்றார்.
மூன்று தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைபு;பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன், இந்து மத விவகார முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை, கிழக்குப் பல்கலைக்கழ வேந்தர் வேல்முருகு விவேகானந்தராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும் இன்னும் பல அதிகாரிகளும் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களும் கலை ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைபு;பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த 3 நாள் மாநாட்டையும் கலைவிழாவையும் ஏற்பாடு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment