மறைந்த பெருந் தலைவர் அஷ்ரபின் அரசியல் சாணக்கியம் சமயோசிதம் எல்லாவற்றிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களாக தற்போதைய அரசியல் எஜமானர்களுக்கு சாமரம் வீசுகின்றவர்களாக தற்போதைய முஸ்லிம் அரசியல் நகர்ந்து கொண்டிருப்பது இந்த சமூகத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் எச்சரித்தார்.
ஏறாவூர் அல்-முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இணைந்து பாடசாலைக்கான ஆராதனை மண்டபம் மற்றும் அலுவலக உபகரணங்கள் என்பனவற்றை புதன்கிழமை 27.09.2017 வழங்கி வைத்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்@ கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் முதலமைச்சரால் ஏற்பட்ட திராணியற்ற இயலாத் தன்மையை தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது இரண்டரை வருட கால அரசியல் சாணக்கியத்தின் மூலம் செயற்திறனுள்ள நல்லாட்சியை நிறுவிக் காட்டியுள்ளார்.
செல்லாக்காசாக இருந்த முன்னாள் முஸ்லிம் முதலமைச்சர் மூவினங்களையும் இணைக்கவில்லை. வெறும் பொம்மை ஆட்சியை நடாத்திய அவரால் சொந்த சமூகமும் நன்மையடையவில்லை, கிழக்கில் வாழும் மற்றைய சமூகங்களும் எந்தவித பிரயோசனத்தையும் அடைந்து கொள்ளவில்லை.
திராணியற்ற, திறமையற்ற, அந்த முதலமைச்சரால் ஏற்பட்;ட அபகீர்த்தியை நாம் களைந்தது மிகப் பெரும் சாதனையாகும்.
உண்மையில் இந்த குறுகிய இரண்டரை வருட கால எமது ஆட்சியில் பல விடயங்களை சாதித்துக் காட்டியுள்ளோம்.
அதில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றது ஒரு புறமிருக்க, சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து அடையப் பெற்றது ஏராளம்.
அதிலும் நீண்ட காலமாக சிதறுண்டு போயிருந்த தமிழ் முஸ்லிம் உறவு என்பதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேசம் என்பதும் சிறுபான்மையினரின் எதிர்கால தனித்துவத்திற்கு ஒரு அடித்தளமாகும்.
ஆனால் தூர நோக்கற்று விமர்சிக்கும் ஒரு சிலர், தமது அறியாமை காரணமாக முற்றத்து மல்லிகையின் சிறப்பை அறியாது முட்டாள் தனமாகப் பேசுவதோடு இந்த சமூகத்தை தறவாகவும் வழிநடாத்துகின்றனர்.
இதனால் உண்டாகப் போகும் இழப்புக்களுக்கு அவர்கள் எப்போதாகிலும் கைசேதப்பட வேண்டியிருக்கும்.” என்றார்.
0 Comments:
Post a Comment