5 Sept 2017

மறைந்த ஊடவியலாளர் குருநாதன் அவர்களின் மறைவுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அனுதாபச் செய்தி

SHARE
இலங்கை ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஊடகத்துறைப் புலமையும் அனுபவமும் மிக்க சின்னையா குருநாதன் அவர்களின் மறைவுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இன்றைய பத்திரிகை உலகில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களே சிறப்பான முறையிலும் நடுநிலைமையுடனும், ஊடக தர்மத்தினை பேணும் வகையிலும் செயற்பட்டு வந்திருக்கின்றனர். அந்தவகையில் குருநாதன் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவே கொள்ள முடியும்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னையா குருநாதன் திருக்கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவராவார். தனது 21வது வயதிலிருந்து  ஊடகத்துறையில் பணியாற்றி 58 வருடங்களை நிறைவு செய்துள்ளார். தினபதி, சிந்தாமணி,  சூடாமணி, வீரகேசரி, தினக்குரல் மற்றும் உதயன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளுக்கும், ஆங்கிலப் பத்திரிகைகளான சண்டே ஒப்சோவர், ஐலன்ட், சண்டே ரைம்ஸ் ஆகியவற்றிலும்  கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஊதயன் பத்திரிகையின் சஞ்சீவி சஞ:சிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

ஊடகத்துறை என்பது மிகவும் நெருக்கடியும், இன்னல்களும், போராட்டங்களும், பிரச்சினைகளும் நிறைந்தது. இந்தத் துறையின் அத்தனை துன்பங்களையும் அனுபவித்து சிறப்பான பணியாற்றிய சின்னையா குருநாதனின் மறைவு ஊடகத்துறையில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடைய பத்திரிகைத்துறை சிறப்பானதொரு வரலாறாகும். அந்த வரலாற்றுப்பதிவுகள் எதிர்காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்ற முனைபவர்களுக்கும் தற்போதுள்ளவர்களுக்கும் உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் அமையும்.

ஊடகத்துறையினர் ஒவ்வொருவரும் தம்முடைய மூத்த அனுபவமுள்ள பத்திரிகையாளர்களின் புலமையை பகிர்ந்து கொண்டோமா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளவேண்டிய மற்றொரு சந்தர்ப்பமாகவும் குருநாதன் அவர்களின் மறைவைப்பார்க்க வேண்டும்.

யுத்தம் நிலவிய காலத்தில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையிலும் தனது ஊடகப்பணியில் சிறப்பாகப்பணியாற்றி ஊடகப்பணியை மேற்கொண்டு விரைவாகச் செய்திகளைக் சேகரிப்பதில் அக்கறையுடன் செயற்பட்டு மக்களின் துயரங்களை உலகுக்கு வெளிக்கொண்டு வந்து நெருக்கடியான காலங்களில் மக்களுக்கு சரியான அறிவூட்டல்களையும் மேற்கொண்ட கலாபூசணம் சின்னையா குருநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன், அவரது உற்றார், உறவினர்களுக்கும், சக ஊடகத்தினருக்கும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

SHARE

Author: verified_user

0 Comments: