5 Sept 2017

கிழக்கு மாகாண கல்வியமைச்சுச் செயலாளர் நியமனம் இனவாதத்தை தூண்டி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம்

SHARE
புதிதாக இடம்பெற்றுள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சுச் செயலாளர் நியமனம் இனவாதத்தை தூண்டி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து கரிசனை காட்டும்படி தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தினால் திங்கட்கிழமை 04.09.2017 ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கையாக முக்கிய ஏழு துறைகளுக்கான செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றங்கள் விமர்சனத்திற்குரிய ஒன்றாகக் காணப்படாவிட்டாலும், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரின் இடமாற்றம் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்தியில் இயங்கும் தேசிய அரசாங்கத்திற்கு முன்னுதாரணமாக விளங்கியது கிழக்கு மாகாணமாகும்.

இங்கு காலாகாலமாக இருந்து வந்த இனவாதம்  தோற்கடிக்கப்பட்டு, இனங்களின் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஆட்சி அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட்ட ஒன்றாகும்.
ஆயினும், பதிய  கல்வியமைச்சுச் செயலாளரின் நியமனம் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் இனவாதம் தலைதூக்கிவிட்டதா எனும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் கல்வியமைச்சில் மாற்றம் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட  ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாடாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

தற்பொழுது கல்வியமைச்சிற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர், முன்னாள் ஆளுநரின் காலத்தில் தற்காலிக செயலாளராகக்  கிழக்கு மாகாணக் கல்வியமைச்சிற்கு நியமிக்கப்பட்டு சிறிது காலம் செயற்பட்ட ஒருவராவார்.
இக்கால கட்டத்தில் இவரால் மேற்கொள்ளப்பட்ட இனவாதச்; செயற்பாடுகள் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயற்பாடுகளை செயற் திறன் அற்றதாக மாற்றியது மட்டுமல்லாது பல்வேறு போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.

குறிப்பாக அவர் தனது தற்காலிக செயலாளர் எனும் பதவிக் காலத்தில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு தனிச் சிங்களத்தில் சுற்றுநிருபங்களை அனுப்பியமை, சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைப்பதற்கு உத்தரவிட்டமை, மற்றும் கீழ் நிலை அதிகாரிகளுடன் சுமுகமான உறவைப் பேணாது நடைமுறைக்குச் சாத்தியமற்ற உத்தரவுகளைப் பிறப்பித்தமை போன்ற கருமங்களில் ஈடுபட்டவராவார்.

மேலும் அவருடைய பதவிக் காலகட்டத்தில் இனவாதக் கல்விச்சிந்தனை மீண்டும் தலை தூக்கிவிடுமோ எனக் கல்விச் சமூகம் அச்சம் கொண்டிருந்தது.
இதன் காரணமாக கிழக்கு மாகாணக் கல்வியமைச்சிலிருந்து இனவாதச் சிந்தனையாளர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக நாம் தொழிற்சங்க ரீதியாகவும், வெகுஜன ஊடகங்கள் மூலமாகவும் போராடியிருந்தோம்.
அதன் பயனாக இனவாதச் சிந்தனையுள்ள செயலாளரை இடமாற்றம் செய்ய முடிந்தது.

இப்பொழுதும் நாம் இனவாதம் பேசவில்லை. பௌத்த சிங்களவராக இருந்தாலும் இனவாதப்போக்கற்ற ஒருவரையே கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு செயலாளராக நியமிக்குமாறு நாம் கோருகின்றோம். அதன்மூலமே இனவாதமற்ற தேசமாக கிழக்கையும் நாட்டையும் கட்டியெழுப்ப முடியும்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் எமது அர்த்தமுள்ள இந்தக் கோரிக்கைக்குச் செவிமடுத்து, இனவாத அரசியலமற்ற, கல்விச் சமூகத்தை உருவாக்க ஆவன செய்யுமாறும் இனவாதமற்ற வேறு ஒரு செயலாளரை நியமிக்குமாறும் வேண்டி நிற்கின்றோம்.

SHARE

Author: verified_user

0 Comments: