5 Sept 2017

திருத்தங்களோடு மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு வியாழக்கிழமை வருகிறது 20வது அரசியல் திருத்தச் சட்டமூலம்.

SHARE
20வது அரசியல் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களோடு மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் வியாழக்கிழமை 07.09.2017  கொண்டு வரப்படுவதாக கிழக்கு மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கடந்த 29ஆம் திகதி இந்த சட்டமூலம் பற்றி மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடப்பட்டதின் பிரகாரம் மேற்படி சட்டமூலத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் செப்ரெம்பெர் 07ஆம் திகதி இடம்பெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

20வது திருத்தச் சட்டமூலம்@ நாட்டின் சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடாத்துவதற்கும், மாகாண சபைகளின் ஆட்சிக் காலத்தை கலைப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதொன்றாகும்.

மத்திய அரசின் இந்த சட்ட வரைவு மாகாண சபைகளுக்குள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை திருத்தங்களோடு மீண்டும் மாகாண சபைக்கு வரும் 20வது திருத்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கம்பற்றி தாங்கள் கவனமாகப் பரிசீலிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஆளும் கிழக்கு மாகாண சபையின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டும் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் பின்னரே 20வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் செப்ரெம்பெர் 07ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: