10 Aug 2017

மட்டக்களப்பில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கென இவ்வாண்டு 98.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருவதாக அவ் அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயற்கை முறையிலான விவசாயப் பண்ணைத்திட்டம், பாடசாலைகளுக்கான வேலைத்திட்டங்கள், விவசாயத்துறை சார்பான திட்டங்களுக்காக இவ்வாண்டு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தலைவியாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பிரதேசங்களான வவுணதீவு, வாகரை, கிரான், பட்டிப்பளை, வாழைச்சேனை ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செங்கல் மற்றும் சீமெந்துக் கல் உற்பத்தித் துறையை மேம்படுத்தல்,  இயற்கை உர உற்பத்தி, மரக்கன்றுகள் வழங்கல் ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கென, கடந்த வருடம் 15.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
வாழ்வாதார, பொருளாதார அபிவிருத்தி கருதிய அனர்த்தத் தணிப்பு வேலைத்திட்டம், விவசாய, மீன்பிடித்துறை சார் திட்டங்கள், குளம் அணைக்கட்டு புனரமைத்தல், இயற்கை முறை பயிர்ச்செய்கைத் திட்டம், சீமெந்துக்கல், செங்கல் உற்பத்தி, பாடசாலைகளில் மாணவர்களுக்கான கழிப்பறைகள், பாடசாலை செயற்பாட்டறை,  ஆகிய செயற்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடக்கம் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களிலும் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் அவ்வப்பிரதேச மக்களின் வாழ்வாதார, பொருளாதார, கல்வி மேம்பாடுகளை நோக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



SHARE

Author: verified_user

0 Comments: