2 Aug 2017

தமிழ் முஸ்லீம் மக்கள் நிரந்தரமான இணக்கப்பாட்டோடு வருகின்ற போதுதான் அரசியல் தீர்வு என்பது அர்த்த புஷ்டியுள்ளதாக இருக்கும் - அமைச்சர் துரை

SHARE
தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தங்கள் தங்களுடைய சுயத்தைப் பேணிக் கொண்டு அதற்கும் மேலாக எங்களிடையே ஒரு நிரந்தரமான இணக்கப்பாட்டை வைத்துக் கொண்டு வருகின்ற போதுதான் அரசியல் தீர்வு என்பது அர்த்த புஷ்டியுள்ளதாக இருக்குமே தவிர இல்லாவிட்டால் அது வெறும் கோசமாக மட்டும் தான் ஆகிவிடும். இந்த விடயத்தை அரசியல் தெரிந்தவர்கள் அரசியலைச் சிந்திக்கின்ற அன்பர்கள் புரிந்து கொள்ள வெண்டும். 

என தமிழசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக் கிழமை (25) அன்று மட்டக்களப்பு திக்கோடையில் ஆரம்ப மருத்துவ சிகிச்சைப் பிரிவு வைத்தியசாலைக் கட்டடத்துக்குக் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்…

தலைமை என்பது முன்னே செல்பவரை இழுத்துப் பிடிக்க வேண்டும், பின்னே வருபவரையும் இழுத்து எடுக்க வேண்டும். தன்னோடு சமமாகச் செல்பவர்களை தட்டிக் கொடுத்து செயற்பட வேண்டும் இவ்வாறான ஒரு செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதைபந்து போன்று எல்லாப் பக்கத்திலும் உதைபட வேண்டி இருக்கின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அதிருப்தியில் இருக்கும் சிலர் கூறுவார்கள் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உசுப்பேற்றும் விதமாக பேசுகின்றார்கள் என்று ஆனால் அது அவ்வாறு அல்ல. மிக ஆளமான அர்த்தத்தோடு மனதில் உள்ளவற்றைப் பேசுபவர்கள் நாங்கள்.

நாங்கள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்புதான் இந்த கிழக்கு மாகாணத்திலே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் சேர்ந்து இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்றோம். இதற்கு முன்பெல்லாம் எங்கெங்கு குறைகள் நடக்கின்றதோ அந்த குறைகளையெல்லாம் எடுத்துக் காட்டி எமது உரிமை சம்மந்தமான விடயங்களையெல்லாம் சொல்லி வந்தோம். ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். தற்போது கூட்டுப் பொறுப்பு என்கின்ற ரீதியில் நாங்களும் சேர்ந்து வேலை செய்கின்ற அந்தப் பொறுப்போடு நாங்கள் செயற்பட வேண்டிய இடத்திலே இருக்கின்றோம்.

தலைமை என்பது முன்னே செல்பவரை இழுத்துப் பிடிக்க வேண்டும், பின்னே வருபவரையும் இழுத்து எடுக்க வேண்டும். தன்னோடு சமமாகச் செல்பவர்களை தட்டிக் கொடுத்து செயற்பட வேண்டும் இவ்வாறான ஒரு செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதைபந்து போன்று எல்லாப் பக்கத்திலும் உதைபட வேண்டி இருக்கின்றது. இந்த முகப்புத்தகங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக மிகக் கடுமையாக விமர்சிப்பதையெல்லாம் காணமுடிகின்றது. இவற்றையெல்லாம் மௌனமாக நாங்கள் பொறுத்திருக்கின்றோம். காலம் பதில் சொல்லும் என்று.

இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மிகச் சிறப்பான ஒரு அரசியலமைப்புச் சட்டமாக ஆக்கும் வரையிலே நாங்கள் எவ்வளவு பொறுமை காக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமை காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் வெண்ணை திரண்டு வரும் போதெல்லாம் தாழியை உடைத்த கதையாகத் தான் இந்த நாட்டிலே தமிழர்களின் வரலாறு இருந்து கொண்டிருக்கின்றது. 

இன்னுமொரு சந்தர்ப்பத்திலே நாங்கள் தாழியை உடைய விட்டோம் என்றால் எமது இருப்பு மிக மிகச் சீக்கிரத்திலே இல்லாமல் போய்விடும்.
எமது தலைவர் அவர்கள் கடந்த தேர்தலின் போது சொன்னார்கள் இப்போது இருக்கின்ற நிலமையை நாங்கள் மாற்றி அமைக்காவிட்டால் எதிர்வரும் பத்து வருடங்களிலே இங்கு தமிழர்களுடைய வரலாறு இல்லாது ஆக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று எனவே அந்த நிலைமையை நாங்கள் மாற்றியமைத்திருக்கின்றோம். எமது தலைமையின் சிந்தனை இன்று இவ்வாறானதொரு நிலை உருவாகியிருக்கின்றது. அவ்வாறு இல்லாது விட்டிருந்தால் மைத்திரிபால ஜனாதிபதியாக வந்திருக்க மாட்டார் மஹிந்தவே ஜனாதிபதியாகியிருப்பார். நல்லாட்சி தோன்றியிருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்திருக்க மாட்டாது. எமது இராஜதந்திரமான வியூகம் இவ்வாறானதொரு நிலைமையை உண்டாக்கியிருக்கின்றது.

எமது தலைவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். இந்த நாட்டில் தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசிய கட்சியின் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் எதிர்த்தார்கள். இவ்வாறு மாறி மாறி ஒருவர் கொண்டு வருகின்ற திட்டத்தை மற்றொருவர் எதிர்க்கின்ற சூழ்நிலை மாற வேண்டுமாக இருந்தால் இரண்டு பெரும்பாண்மைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்படுகின்ற ஒரு நிலைமை உருவாக வேண்டும் என்று கனவு கண்டவர்கள் எமது தலைவர்கள். அவ்வாறு இடம்பெற முடியுமா என்கின்ற கேள்வி எம்அனைவருக்குள்ளும் இருந்தது. 

ஆனால் இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டு பெரும்பாண்மைக் கட்சிகளும் சேர்ந்து அரசை அமைத்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயத்திற்குள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு அடுத்த தேவைப்பாடக இருந்ததுதான் சர்வதேசத்தினுடைய அனுசரணை தற்போது அதுவும் கிடைத்திருக்கின்றது. இந்த அனைத்தையும் வைத்துக் கொண்டும் தமிழர்கள் இந்த நாட்டில் ஒரு அடைவை அடையவில்லை என்றால் விதிவழி தமிழர்கள் செல்லுகின்றார்கள் என்றாகிவிடும். எனவே இதனை மாற்றியமைக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்நிலையில் நாங்கள் என்ன செய்ய வெண்டும் என்பது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். நிதானமாக நமது ஒவ்வொரு விடயங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஏந்த சந்தர்ப்பத்திலும் சட்டம் என்கின்ற விடயத்தினுடாக மக்களை நாங்கள் அழைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சத்திய சோதனையிலேதான் நீந்திக் கொண்டிருக்கின்றது. பலவிதமான முறைமையற்ற சீரற்ற செயற்பாடுகளுக்குள்ளே நாங்களும் குழம்பிப்போய் இருக்கின்றோம். எமது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பங்கீடுகளைப் பார்க்கின்ற போது இவ்வாறான நெருக்கவாரங்கள் எங்களுக்குள்ளேயும் இருக்கின்றது. இவற்றை எவ்வெவ்வாறெல்லாம் சரிக்கட்ட முடியுமோ அவ்வவ்வாறெல்லாம் சரிக்கட்டுகின்ற விதத்திலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதுக்கு அடுத்த நிலைக்கு செல்லும் போது அது எமது ஒற்றுமையை இணக்கப்பாட்டடை இல்லாதாக்கி விடக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. அற்காக எல்லோரும் ஒரே விதமாகச் செல்ல வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒரு கோட்பாட்டின் மத்தியிலே நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையிலே நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றி பேசுவோமாக இருந்தால் தமிழர்களும் முஸ்லீம்களும் அறுபதுகளிலே எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறு செற்படக் கூடிய விதத்திலே இருக்க வேண்டும். அப்போதைய காலத்தில் முஸ்லீம் பெண்கள் தலைவர்கள் எனப் பலரும் எங்களோடு சேர்ந்து உழைத்தார்கள். அவ்வாறு வெற்றி கண்டதுதான் அந்த அறுபது காலப்பகுதியிலே கண்ட சத்தியாக்கிரக வெற்றிகள். அவ்வாறான நிலைக்கு தற்போது நாங்கள் வருகின்ற போது முப்பது ஆண்டு காலம் பழகிப்போன சிலரது உத்திகள் எங்களை மிகச் சங்கடத்திற்குள்ளே ஆளாக்குகின்றன. ஆனால் அந்த சங்கடத்தை மிகவும் சாதுரியமாக நாங்கள் சமாளித்தக் கொண்டு செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகள் செய்யாது உசுப்பேத்தும் என்று இதற்கு முன் சொல்லப்பட்ட வார்த்தைகளைத் தூக்கி எறிந்து விட்டு இன்றை ஆட்சியை அமைத்துக் கொடுத்ததே தமித் தேசியக் கூட்டமைப்புதான் என்று சொல்லுகின்ற நிலைமைக்கு வந்திருக்கின்றோம். அவ்வாறு ஆட்சி அமைத்துக் கொடுத்ததன் காரணமாகத் தான் பருவகாலப் பறவைகள் போன்று வெளிநாட்டில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது வந்திருக்கின்றார்கள். அவர்கள் அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இந்தச் சூழ்நிலையிலே எங்களோடு சேர்ந்து உழைத்திட வேண்டும்.

தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தங்கள் தங்களுடைய சுயத்தைப் பேணிக் கொண்டு அதற்கும் மேலாக எங்களிடையே ஒரு நிரந்தரமான இணக்கப்பாட்டை வைத்துக் கொண்டு வருகின்ற போதுதான் அரசியல் தீர்வு என்பது அர்த்தபுஷ்டியுள்ளதாக இருக்குமே தவிர இல்லாவிட்டால் அது வெறும் கோசமாக மட்டும் தான் ஆகிவிடும். இந்த விடயத்தை அரசியல் தெரிந்தவர்கள் அரசியலைச் சிந்திக்கின்ற அன்பர்கள் பரிந்து கொள்ள வெண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: