கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு செல்லும் விடயத்தில் விடுமுறை பெறுவது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஞாயிற்றுக்கிழமை 06.08.2017 தெரிவித்தார்.
இது விடயமாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன் தான் பிரத்தியேகமான பேச்சுவார்த்தை நடத்தியன் பயனாக இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்று ஹஜ் யாத்திரை சென்று தமது மார்க்கக் கடமையைப் பூர்த்தி செய்வதில் நிருவாக ரீதியிலான சில சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்,
இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தனர்.
இதற்கமைவாகவே கிழக்கு முதலமைச்சர் ஆளுநருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களுள் இது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றுமுள்ள அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சம்பளமற்ற விடுமுறை பெறுவதில் நிருவாக ரீதியிலான நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் புனித ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்குமாறும் இதற்கெனத் தாபனக் கோவையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் தொடர்ச்சியாக அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.
இது விடயமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில்@ போதிய பண வசதியும் தேகாரோக்கியமும் உள்ளபோது முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகளுள் ஒன்று புனித ஹஜ் ஆகும். இதற்காக மக்கா நோக்கிப் பயணிக்கும் யாத்திகர்கள் 40 நாட்கள் வரை அங்கு தங்க வேண்டியுள்ளது.
இதற்கென இலங்கைக்கு வெளியே சம்பளமற்ற விடுமுறையில் செல்ல அனுமதி பெற்றுக் கொள்வதில் கிழக்கு மாகாண முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
எந்தவொரு மாகாணத்திலுமில்லாத தாபனக் கோவையை மீறிய கிழக்கு மாகாண ஆளுநர்களின் நடவடிக்கைகளுக்கு இற்றைவரை எந்த நடவடிக்கையும் எவராலும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஆயினும், தற்போதைய முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதிய ஆளுநருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொண்டது வரவேற்கத்தக்கது என்றனர்.

0 Comments:
Post a Comment