மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவட்டைக் கிராமத்திலுள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில் கடந்த 30 வருடகாலமாக இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க வடக்கு கிழக்கில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அங்காங்கே விடுவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாலையடிவட்டை பொதுச் சந்தைக்குரிய காணியை இதுவரையில் இராணுவத்தினர் விடுவிக்கவில்லை.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவடைப் பகுதியின் நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு விழா சனிக்கிழமை (05) மாலை முன்பள்ளி பொறுப்பாசிரியர் ம.கலாவதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
இப்பிரதேசத்தின் மண்டூரில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சுமார் 30 வருடகாலமாக நிலை கொண்டிருந்த பொலிசார் அண்மையில் அதனை விடுவித்து அவர்களுக்கென வெல்லாவெளியில் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றி அவர்களது சேவைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில், பாலையடிவட்டை பொதுச் சந்தைக்குரிய காணியை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவத்தினர் அக்காணியை விடுவிக்க வேண்டும். எனத் தெரிவித்த அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலைத்தைவிட தற்போது ஓரளவு அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனவே எமது மக்களின் தேவைகளை நாம் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பட்டிருப்பு கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் மு.வரதராஜன், போரதீவுப்பற்று பிரதேச சனசமூக உத்தியோகஸ்தர் க.கருணாநிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment