கிழக்கு மாகாணத்தில் 45 வயதுவரை மூப்படைந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரசதுறைகளில் நியமனம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் இணங்கியுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம விற்கும் இடையில் புதன்கிழமை 02.08.2017 மாலை ஆளுநர் இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக காலந்தாழ்த்தி தமது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இவர்களுக்கான நியமன வயதெல்லையை 45 வரை அனுமதிக்க ஆளுநர் இணங்கிக் கொண்டதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தில் 40 வயதைக் கடந்து தமது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து தொழிலின்றி இருக்கும் சுமார் 70 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு முதலைமச்சர் அக்கறை செலுத்தியிருந்தார்.
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவிருக்கின்றது.
இதற்காக 40 வயது வரையான பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச்சேவை ஆணைக்குழு, மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு ஆளுனர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
ஆனால் புதன்கிழமை முதலமைச்சர் ஆளுநரோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து 45 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் இணங்கிக் கொண்டபடி இதுபற்றி பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனால் கிழக்கு மாகாணத்தில் தமது பட்டப்படிப்பைப் முடித்துக் கொண்டுள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட 45வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள் நன்மையடையவுள்ளனர் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment