ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி அவர்களது நீண்டகால வேண்டுகோளாக இருந்து வந்த கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவிடயமான கலந்துரையாடலும் கள விஜயமும் சனிக்கிழமை 05.08.2017 கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்தின் தலைமையில் செங்கலடி உறுகாமம் பெரு நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கள நிலவரங்களை ஆராய்வதற்காக மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். துரைசிங்கம் உட்பட உதவிப் பணிப்பாளர் நாயகம் எஸ். சுந்தரலிங்கம் மற்றும் மொகமட் அலியார் உட்பட அதிகாரிகளம் பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலின்போது மேற்படி அணைக்கட்டு தொடர்பில் சாத்திய தன்மை மற்றும் அணைக்கட்டினை நிரந்தரமாக அமைப்பதில் உள்ள சாதக, பாதக நிலைமைகள் மற்றும் அதிலுள்ள சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போது கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ள இடம் அவ்வணையை நிரந்தரமாக அமைப்பதற்கு சாத்தியமற்ற தன்மையுடன் காணப்படுவதாகவும் அதன் மண்வளம் அதற்கேற்ற விதத்தில் இல்லாமல் இருப்பதால் வீரக்கட்டு மயிலவெட்டுவான் பிரதேசத்தில் இடம் தெரிவு செய்யப்பட்டு அங்கு அந்த அணைக்கட்டினை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தற்போது அணைக்கட்டு இருக்கும் இடத்திலேயே நிரந்தர அணைக்கட்டு அமைத்தால் அதன் மூலம் சுமார் 3000 ஏக்கர்களுக்கு மாத்திரமே நன்மை பெற முடியும். அதேவேளை வீரக்கட்டு மயிலவெட்டுவானில் அணைக்கட்டினை அமைப்பதால் சுமார் 5000 ஏக்கர்கள் வரையில் விவசாயச் செய்கை மேற்கொள்ள முடியும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் குறிப்பிட்ட இடங்கள் அமைச்சர் உட்பட அதிகாரிகளினால் சென்று பார்வையிடப்பட்டதுடன் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திலேயே அணைக்கட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment