மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின் போது 55 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் சில திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 20ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம், சுகாதார நலன்புரி மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தந்திரோப அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் உட்பட இன்னும் பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஏறாவூரில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும் ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலா பொழுதுபோக்கு விற்பனை மற்றும் தகவல் மையத்திற்கான அடிக்கல் என்பனவும் நடப்படவுள்ளது.
மேலும், புதிதாக நிருமாணிக்கப்பட்ட காத்தான்குடி நகரசபைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் ஆரையம்பதியில் 100மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள ஒருங்கிணைந்த சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவினால் நடப்படவுள்ளது.
இதில் அமையவுள்ள சுற்றுலாத் தொகுதியில் பயிற்சி மையங்கள் மற்றும் கலாசார மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
0 Comments:
Post a Comment