23 Jul 2017

மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் முந்நூறு மில்லியன் ரூபா நிதி கிழக்கில் உள்ள பதினெட்டு இலட்சம் மக்களை திருப்திபடுத்த முடியாது.முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் தெரிவிப்பு.

SHARE
மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் முந்நூறு மில்லியன் ரூபா நிதியானது கிழக்கு மாகாணத்தில் உள்ள பதினெட்டு  இலட்சம் மக்களின் தேவைகளை திருப்தி படுத்த முடியாது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.
களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றும்போதே மேலுள்ளவாறு தெரிவித்தார். பொருளாதார மத்திய நிலையத்திற்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (22) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…. களுதாவளையில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையமானது தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம்போன்று பாரியதொரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றமடைய வேண்டும். களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாங்கள் அடிக்கல் நாட்டி வைத்திருக்கின்றோம். இதற்கு வரும் பாதையானது மோசமாகவுள்ளது. இதனை குறுகிய காலத்திற்குள் புனரமைக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார உற்பத்தி நிலையம் விரைவாக கட்டி முடிக்கப்படும்.

இனப்பிரச்சனை சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர்,எதிர்கட்சித்தலைவர் உட்பட பல்வேறு தரப்பினருடன் பேசப்படுகின்றது. இவ்வாறு நாங்கள் தொடர்ச்சியாக பேசிவருகின்றோம். இவ்வாறு இருக்கும்போது மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை செய்து தரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூவினங்களைச் சேர்ந்த பதினெட்டு இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். இந்த கிழக்கு மாகாண மக்களின் தேவைகளான கல்வி, விவசாயம், கால்நடை உற்பத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை, வீதி உட்கட்டமைப்பு, போன்ற தேவைகளுக்கு முந்நூறு மில்லியன் ரூபா மத்திய அரசால் ஒதுக்கப்படுகின்றது. இது கிழக்கு மாகாண மக்களை திருப்பிபடுத்த முடியாது.

பல பேச்சுவார்த்தையை நிதி ஒதுக்கீடு விடயமாக பேசப்பட்டு வருகின்றோம். பேச்சுவார்த்தையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். இன்று ஒருசில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் பயனாகத்தான் மட்டக்களப்பில் இரண்டு சுற்றுலா மையங்கள் அமைக்கப்படுகின்றது.

தலா நூறு மில்லியன் ரூபாவில் ஆரையம்பதி,ஏறாவூரில் சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இதனால் சிறுகைத்தொழிலாளர்கள்,பிரதேச மக்கள் நன்மையடையவிருக்கின்றார்கள். இதனை மேம்படுத்தும் வகையில் இன்னும்பல நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் விடயத்தில் கிழக்கு மாகாணசபை பாரிய கவனம் செலுத்தியுள்ளோம். அதாவது அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்து வருகின்றோம். இவர்களுக்கு நியமனம் வழங்குவதற்குரிய திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம்.


இதன் முதற்கட்டமாக செப்ரெம்பர் மாதம் ஐந்தாம் திகதி 1441 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு திகதி குறிப்பிட்டுள்ளோம். இன்னும் 1742 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதி கோரியுள்ளோம்.எதிர்வரும் புதன்கிழமை (26) விண்ணப்பம் கோரப்படுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: