மட்டக்களப்பில் மத முரண்பாடுகள் கூர்மையடையும்போது ஏன் மௌனம் சாதிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பில் முனைப்புப் பெறும் மதவாத முரண்பாடுகளுக்கு மாவட்ட சர்வ மதப் பேரவை எதிர்வினையாற்ற வேண்டியதன் அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
இது விடயமாக ஞாயிற்றுக்கிழமை 23.07.2017 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
இனவாதக் குழுக்களுக்கு யாரும் உதவுவதை ஊக்குவிக்கக் கூடாது என்ற அரசாங்கக் கொள்கை இருக்கும்போது தீவிரப் போக்கு தளர்ந்து போவது இயல்பு.
அதேவேளை, அரசாங்கக் கொள்கையை மட்டும் எதிர்பார்த்து இன மத நல்லிணக்கம் பற்றிய செயற்பாட்டாளர்கள் செயலற்றுப் போய் இருந்து விடக் கூடாது.
சர்வமதப் பேரவையின் மூலம் செய்யக் கூடிய விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்வர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த மூன்று தசாப்த கால போரினால் பெரும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுள் ஒன்றான மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை முழுமையாக சிதைவடைவதற்கு போர் காரணமாக அமைந்தது.
அதேவேளை, சுனாமிப் பேரழிவும் மட்டக்களப்பு மக்களை வாட்டி எடுத்திருந்தது.
அத்தகைய செயற்கை இயற்கைப் பாதிப்புகளுக்குள்ளான மட்டக்களப்பு மக்களை இயல்பு வாழ்க்கைக்குள் மீட்டெடுக்க நீண்ட காலம் தேவைப்படலாம்.
அதேவேளை இத்தகைய செயற்கை இயற்கைப் பேரழிவுகளிலிருந்து தப்பிப் பிழைத்த மக்கள் மீண்டும் பீதியும் சந்தேகமும் இன்றி வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாகிய போதிலும் சில மதவாத சக்திகளினால் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறல்கள், சிலை வைப்பு என்பன குணமடைந்த உள்ளங்களில் ரணங்களை தோற்றுவிக்கக் காரணமாய் அமைகின்றன.
இச்செயற்பாடுகளில் மதத் தலைவர்கள் ஈடுபடுவதும் அவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகவாழ்வினை கட்டி எழுப்புவதற்கு பெரிதும் தடையாகவும் சவாலாகவும் அமைந்து விட்டிருக்கின்றன.
எனவே, இந்த விடயங்களை பூசி, மெழுகி மூடி மறைத்து விட்டு வேறெங்கோ நடக்கின்ற சமாதான செயற்பாடுகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது.
சிறியதோ பெரியதோ இந்த மாவட்டத்திற்குள் எரியும் நெருப்பாக இருந்து கொண்டிருக்கின்ற மத முரண்பாடுகளைப் பரஸ்பர புரிந்துணர்வுடன் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான செயற்பாடுகளைத் துணிந்து செய்ய வேண்டும்,
மக்களை அறநெறி சமாதானத்தின்பால் அறிவூட்ட வேண்டும் என்பதற்காகவே நாம் மாவட்ட சர்வமதப் பேரவைகளை உருவாக்கியிருக்கின்றோம்.
நாடாளாவிய ரீதியில் செயற்படும் இந்த சர்வமதப் பேரவைகள் ஆங்காங்கே நீறு பூத்த நெருப்பாய் இருந்த பல்வேறு மத முரண்பாடுகளில் தலையிட்டு இன சௌஜன்யத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி நிம்மதிக்கு வழி சமைத்திருக்கின்றது.
அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்றே மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையிலுள்ள அங்கத்தவர்கள் மத இன முரண்பாட்டை நீக்கி ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment