கிழக்குப் பிராந்தியத்தில் தமிழர்களும் முஸ்லிம்களுமாக 90 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் தமிழ்பேசுவோராக உள்ளபோதிலும் அந்தப் பகுதியில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸ் அதிகாரிகளைக் கணக்கிட்டால் அவர்களில் 90 சத வீதமானவர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தோராக உள்ளனர் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக கிராமத்திற்குப் பொலிஸ் நடமாடும் சேவை எனும் செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் பொலிஸ் சாவடி ஒன்று ஞாயிற்றுக்கிழமை 23.07.2017 திறந்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் பேசுவோரின் பகுதிகளிலுள்ள சிங்கள பொலிஸ் அதிகாரிகள் அந்த மக்களுக்கு சிறப்பான, தூய்மையான பணியைச் செய்ய வேண்டிய கடமைப் பொறுப்பு உள்ளது.
அவர்கள் சிங்கள அதிகாரிகளாக இருந்த போதிலும் தம்மிடம் சேவை பெறும் மக்கள் சிறுபான்மைத் தமழ் முஸ்லிம்கள் என்பதால் எந்த வித பாகுபாடோ குறைகளோ ஏற்படாத வண்ணம் சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க வேண்டும்.
இதுபற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கின்றேன். கண்ணடிப்பான பணிப்புரை விடுத்திருக்கின்றேன்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக குறிப்பிட்ட காலம் வரையில் கடமையாற்றியுள்ளதால் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் கஸ்ட நஸ்டங்களை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.
அதன் காரணமாகவே மக்களின் நலன் கருதி மக்களின் காலடிக்கு பொலிஸ் சேவை செல்ல வேண்டும் என அவர் அவாக் கொண்டு இத்தகைய ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணிப்புரை விடுத்திருக்கின்றார்.
பொலிஸ் திணைக்களத்தால் மக்களுக்கு அநேக சேவைகளை வழங்க முடியும்.
பொலிஸார் சீருடையில் இருக்போது மாத்திரம்தான் வித்தியாசமாகத் தோற்றமளிப்பார்கள். மற்றப்படி சீருடையைக் கழற்றினால் அவர் பொது மகன் தான்.” என்றார்.
இந்த வைபவத்தில், செங்கலடி பிரதேச வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம். பழீல், கிரான் உதவிப் பிரதேச செயலாளர் ஜி. அருணன், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், கிராம சேவைகர்களான பீதாம்பரம் மேகலா, நிர்மலா ஐயாத்துரை, ரீ. லதீஸ்காந்த், சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள், இந்து, இஸ்லாமிய, பௌத்த மதப் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நடமாடும் பொலிஸ் நிலையம் ஒரு மாத காலத்துக்கு இயங்கவுள்ளதுடன், இங்கு கல்வி சுகாதாரம், சிரமதானம், மற்றும் கலை கலாசாரம் விளையாட்டு என்பன போன்ற செயற் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment