23 Jul 2017

ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் - தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

SHARE
ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் சுய தொழிலில் ஈடுபட்டுவரும் சமுர்த்தி பயனாளிப் பெண்களை வலுவூட்டுமுகமாக  வியாழக் கிழமை

(20) தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி செயலகத்தினால், ஆரையம்பதி கூட்டுறவு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரதேச செயலக திட்ட முகாமையாளர் யு.எல். சம்சுதீன் அவர்களால் இணைப்புச் செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தலைமையுரை நிகழ்த்திய, செயலக முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ராசலிங்கம் அவர்கள் குறிப்பிட்ட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி விபரித்தார்.

அதன் தொடராக, தலைமையக முகாமையாளர் ஏ.தனேந்திரராசா  சிற்றுரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. என். சத்தியானந்தி அவர்கள் எவ்வாறு தொழில் ஒன்றை ஊக்கமுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று தனது சிறப்புரையில் சுட்டிக் காட்டினார்.

அதன் தொடராக குறிப்பிட்ட நிகழ்ச்சியின் பிரதான வளவாளராக கலந்து கொண்ட தன்னம்பிக்கை மஸாகி (பிஸிலங்கா) அவர்கள், “கனவுக் கைத்தொழில்“ என்ற தலைப்பில் அழகிய விளக்க காட்சிகளுடன் தனது உற்சாகமூட்டும் உரையினை பயனாளிகளின் சொந்த அனுபவங்களை மையப்படுத்தி நிகழ்த்தினார்.

இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம் அவர்கள் விஷேட உரை ஆற்றினார்.
அதில், தான் இதுவரை கலந்துகொண்ட பல்வேறு வழிகாட்டல் நிகழ்வுகளிலும் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், நிச்சயமாக வருகை தந்திருந்த பயனாளிகளும் தங்கள் தொழிலை ஒரு திட்டமிட்ட அடிப்படையில் உற்சாகத்துடன் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு காரணமாக இருந்த வளவாளரை மனந்திறந்து பாராட்டியதோடு, மாவட்டமெங்கும் எதிர்காலத்தில் இடம்பெற இருக்கும் பல்வேறுபட்ட வழிகாட்டல் நிகழ்ச்சிகளுக்கும் அவரை தான் சிபாரிசு செய்ய இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் வருகை தந்திருந்த பயனாளிகள் பலரும் தமது தொழிலை உற்சாகத்துடன் மேலும் முன்னேற்றிக் கொள்ள இது ஒரு உந்து சக்தியான நிகழ்வாக அமைந்ததாக கருத்துக்களை கூறினார்கள்.


இறுதியில், சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அபிவிருத்தி செய்வதிலும் அரச மற்றும் தனியார் யந்திரங்களுடன் இணைந்து பக்கபலமாக செயற்பட இருக்கும் தங்களது எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிமுகங்களை வழங்கிய தன்னம்பிக்கை மஸாகி அவர்கள், தனது மேலான்மையின் கீழ் உள்ள பிஸிலங்கா நிறுவனத்தினூடாக பயனாளிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: