19 Jul 2017

இலங்கைப் போக்குவரத்துச் சபை சொந்தமான சேவையிலீடுபட்ட பஸ் மீது குருக்கள்மடத்தில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் சாரதி படுகாயம்

SHARE
இலங்கைப் போக்குவரத்துச் சபை சொந்தமான சேவையிலீடுபட்ட பஸ் மீது குருக்கள்மடத்தில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் சாரதி படுகாயம்

திருகோணமலை – கல்முனை சேவையிலீடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை ஏறாவூர் சாலைக்குச் சொந்தமான பஸ் மீது செவ்வாய்க்கிழமை இரவு (18.07.2017) மாலை 6.45 மணியளவில் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பஸ் சாரதியான ஏறாவூரைச் சேர்ந்த முத்தலிப் பிர்தௌஸ் (வயது 38) என்பவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகிய பஸ் கண்ணாடிகள் நொருங்கியதால் சேதமடைந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்த நபர்களே தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருப்பதுபற்றி ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க் கிழமை (18) காலை திருகோணமலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து சிலர் இந்த பஸ்சாரதி மற்றும் நடத்துநருடன் தகராறு புரிந்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்புக் காரில் வந்த நபர்கள் மற்றும் திருகோணமலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து தகராற்றில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சமீப காலமாக கொழும்பு-மட்டக்களப்பு, கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இ.போ.ச பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது அதிகரித்திருக்கிறன. 

கடந்த வாரம் மட்டக்களப்பு- மஹரகமை சேவையில் ஈடுபட்ட இ.போ.ச மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பஸ் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள அசேலபுர பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டதில் அதன் சாரதியும் பயணி ஒருவரும் படுகாயமடைந்திருந்தனர். இச்சம்பவங்களினால் அச்சமடைந்துள்ள பயணிகள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: