23 Jul 2017

கட்டுரை: யுத்தம் முடிவுற்று 8 வருடங்கள் கடந்தும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர்

SHARE
யுத்தம் முடிவுற்று 8 வருடங்கள் கடந்தும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள்
வாழ்கின்றனர்இலங்கைப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தாலும், அவை ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் என்றும் மறையாதது. 

பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர்.

யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், இயற்கை மரணம் என்பவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல!

இப்பெண்களின் இன்னல்களைத் துடைக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் இப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களது ஆற்றலை மேம்படுத்தல் தொடர்பாக தனியார் துறை, அரசாங்கம், ஊடகம் மற்றும் சிவில் சமூகம், பாலினம் ஆகியவற்றின் ஊடாக அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில யுத்த பிறதேசங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தள மேம்பாட்டு பயிற்சியாளராக அனுபவம் கொண்ட துணிகர ஆராய்ச்சியாளாரான ராதிகா ஹெட்டியாராச்சி  தனது பணிகளினை மேற்கொண்டு வருகின்றார். ஆயிரம் கணக்கான  விதவைகளினை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளினையும் வெளிகொண்டுவந்துள்ளார். 

போரால் 90, 000 பேர் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதாக மகளிர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிழக்கில் சுமார் 49, 000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதுடன் வடக்கில் சுமார் 40, 000 பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட இந்தப் பெண்களில் 12, 000   பேர் 40 வயதை அண்மித்தவர்கள் என்பதும் 8000 பேருக்கு மூன்று வயது பிள்ளைகள் இருப்பதும் அரசின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

90 ஆயிரம் விதவைகள் அரசிடம் பதிவு செய்திருக்கின்றனர். இதுதவிர பதிவு செய்யாத விதவைகளும் உள்ளனர். பெரும்பாலான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், தற்போது உயர்கல்விக்கு வழியின்றித் தடுமாறுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் உள்ளதாக, மாவட்ட செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43 ஆயிரம் வரையான குடும்பங்களில் போர் காரணமாக விதவைகளாக்கப்பட்ட 1,717 பேரும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,445  பேர் விதவைகளாகவும்  காணப்படுகின்றனர்.

குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக, கணவனை இழந்த, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதற்கமைய, கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 951 விதவைகளும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 349 விதவைகளும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 199 விதவைகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 218 விதவைகளும் காணப்படுகின்றனர். இதுதவிர, கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 4,455 விதவைகள் காணப்படுகின்றனர் என மாவட்ட செயலகப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் போஷாக்கு குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக வாழும் மாவட்டம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக வங்கியுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திடமும் கையளிக்கப்பட உள்ளது.

வடக்கு கிழக்கில் நடந்த போரில் இறுதிக்கட்டம் வரை முல்லைத்தீவு மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டது. போர் காரணமாக அதிகளவில் கொல்லப்பட்ட ஆண்களும் சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது.

குடும்ப தலைவராக ஆண் இல்லாமை, பெண்கள் குடும்பத்திற்கு தலைமையாக இருந்து வருவது, வாழ்வாதார பிரச்சினை காரணமாக முல்லைத்தீவு மக்கள் பெரும் வறுமையை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே அங்கு போஷாக்கின்மையும் அதிகரித்துள்ளதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் அதேவேளை பெரும்பான்மையான விதவைகள் தமிழ் மக்களாக இருப்பதைக் காட்டும் புள்ளிவிபரங்கள் சில செய்திகளை அழுத்தமாக எடுத்துரைக்கின்றன.

இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தின் அறிக்கை!

போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணாமல் போனவர்கள், கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். 

கடந்த டிசம்பரில், இலங்கையின் வடக்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 2010 இல் காணாமல் போன கேலிச் சித்திரவடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை உள்ளடங்கலாக, கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, யுத்த மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததாக சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக,இலங்கை பொலிஸார் எந்தவொரு முறைப்பாடுகளையும் பதிவு செய்ய மறுப்பதாகவும் இங்கிலாந்து வெளியுறவுப் பணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் நடமாட்டம் அங்குள்ள பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கம் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் எந்தவொரு குறைந்த முன்னேற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை என இங்கிலாந்து அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகள் குழுவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிட்டுள்ள இங்கிலாந்து அறிக்கை, உலக பொருளாதார மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட பூகோள பால்நிலைச் சுட்டியில் 16 ஆவது இடத்திலிருந்த இலங்கை தற்போது 31 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2011 முழுமையும் மனித உரிமைகள் தொடர்பிலும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், இலங்கையில் மனித உரிமையை பாதுகாத்தல் என்பது கடந்த ஆண்டில் கேள்விக்குறியாக காணப்பட்டதாகவும் இங்கிலாந்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம்
கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் உக்கிரமாக நடந்த யுத்தமும், மிதி வெடிகளிலும் சிக்கி அதிகமான தமிழ் மக்கள் தங்கள் கால் கைகளை இழந்திருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இன்று கொண்டு செல்ல முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது தவிர ஆண் துணையிழந்த பெண்களும், தங்கள் குடும்பத்தினை தலைமையேற்று நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவர்கள் தவிக்கின்றார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுற்று 8 வருடங்கள் கடந்தும் பாதுகாப்பு, வாழ்வாதாரமும் சமூக பாதுகாப்பும், சலுகைகளும் உதவித் திட்டங்களும், கல்வி, சுகாதாரமும் சத்துணவும், சமூக கலாச்சார விடயங்கள் மற்றும் காணாமல் போனோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் போன்ற விடயங்கள் மீதான விசேட செயற்றிட்டங்கள் இன்னும் ஆமை வேகத்திலேயே காணப்படுகின்றது  என்பது பலரது குற்றச்சாட்டு.   

இலங்கை பெண்கள் பணியகத்தின் கீழ் செயற்படுகின்ற விதவைகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கான அவர்களது வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த 2015 ஆம் ஆண்டில் விசேட செயற்றிட்டத்தின் கீழ் 50 மில்லியன்களை முதலிட்டு 2008 பெண்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்பட்டுள்ளனர். இலங்கை பெண்கள் பணியகத்தினால் 2016 ஆண்டில் பின்வரும் செயற்றிட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தப்படுகின்றன. 

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. சர்வதேசத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளே விட அனுமதி மறுக்கின்றனர். என்று எம்.பிக்கள் மனம் திறந்து தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.இலங்கையில் தமிழர்கள் சுதந்திரக் காற்றைத் தற்போது அனுபவித்தாலும், அது உயிரோட்டமுள்ள ஒக்சிஜனாக இல்லை என்பதுதான் உண்மை.


கணவரை இழந்த பெண்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.  

கணவரை இழந்த பெண்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. சிலசமயங்களில் அவர்களது ஆடைகளும் நடத்தைகளும் கூட விமர்சிக்கப்படுகின்றன. மீண்டும் மறுமண குடும்ப பந்தத்தில் இணையவிரும்பும் பெண்கள் சமூகத்தின் அவச்சொல் குறித்துப் பயப்படும் நிலை இருக்கின்றது என்று ராதிகா ஹெட்டியாராச்சியின்  வீடியோ நேர்காணல்கள் மற்றும் கடிதங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 




முல்லைத்தீவைச்ச சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் சபாரெத்தினம் சாந்திதேவி: யுத்தத்தில்   கணவர் மற்றும் பிள்ளைகள்  கொல்லப்பட்டார்கள். இத்தாய் பிள்ளைகளுடன் தனித்துவிடப்பட்டார். கணவனை இழந்த நிலையில் தனது  பிள்ளைகளையும் பெரும் நெருக்கடியின் மத்தியில் வளர்த்து வந்தார்  

“1984ம் ஆண்டு இடம்பெயர்ந்து இலவத்தையில் வசித்து வரும்போது ஐந்து குழந்தைகள் உள்ளன. அப்போது எனது கணவரை 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் சூடுபட்டு மரணம் ஆனார். ஆனாற் இதன் பின்பு மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தேன். எது பிள்ளைகள் கல்விகற்க முடியவில்லை. உணவு உடை உறைவிடமில்லாமல் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்து மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தத்தினால் பொக்கணை முள்ளிவாக்கால்லில் எனது பிள்ளைகள் உணவும், தண்ணீர், ஒன்றுமில்லாமல் இருந்து செல் அங்கும் இங்கும் வீச வீச எங்கள் உற்று இருந்து நசித்து முத்த மகள் செல்வீச்சினால் இறந்தார். எனது பேரப்பிள்ளையும் இறந்து. எனது மகள் பலத்த காயம் அடைந்தார். எனக்கும் தலையில் பலத்த காயம் அடைந்தேன். அப்போது எனக்கு ஒன்றும் தெரியாத நிலையில் உள்ளேன். எனது மகன் கப்பலில் என்னை வைத்தியர் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் மீன்டும் எனது மருமகள் கைபிள்ளை இவரை விட்டு செல் வீச்சினால் இறந்துள்ளார். எனது பேரப்பிள்ளைகள் அனைத்தவித்து அலைந்து வந்தார். முகாமில் சாப்பாடும் இல்லாமல் கண்ணீரும் சோறுமாக வாழ்ந்து வந்தார்கள். நான் வைத்தியசாலையில் இருந்து கொண்டு எனது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் சிறகு இல்லாத குருவி தவித்தது போல் தவித்தவண்ணம் இருந்தேன். எனது பிள்ளைகள் அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை என்று எண்ணிக் கொண்டு அழுது கொண்டே இருப்பார்கள். என்னை வவுனியா வைத்தியாசாலையில் 1 வருடமாக இருந்து வைத்தியம் பெற்ற வந்துள்ளேன். எனக்கு சுகம் ஆகிவிட்டது என்னை பிள்ளைகளிடம் போகச் சொன்னார். பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் பேப்பர் மூலம் அறிந்து கைச்சேரி ஊடாக எனது பிள்ளைகளிடம் விட்டார். கவலையுடன் வந்து சேந்தேன் மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்க கவலைகள் திரமுடியவில்லை. எனக்கு தலைகாய் மட்டதும் கண்ணும் தெரியாவில்லை மீண்டும் நோயாளி ஆகியுள்ளேன். மீண்டும் 18.02.2012ம் ஆண்டு கொக்குத் தொடுவாய்க்கு வந்து அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம_ என்றார். சபாரெத்தினம் சாந்திதேவி.


கிளிநோச்சியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் 

எனது நிலமையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. இடப்பெயர்வின் வடுக்கள் இன்னமும் எனது மனதைவிட்டு அகலவில்லை. 1998 இந்த வருடத்தை நினைத்தால் இப்பவூம் பயப்பீதி மனதில் உறுத்துகிறது. இடம்பெயர்வில் எனது கணவனை இழந்த நான் எனது நான்கு பிள்ளைகளுடன் 1998-08-15 வீட்டு தளபாடங்களையூம் ஏற்றி செல்லடி மத்தியில் பயணம் தொடர்ந்தேன். வட்டக்கச்சி விசுவமடு தர்மபுரம் தேவிபுரம் செல்லமழை மத்தியில் நான்கு பிள்ளைகளையூம் காப்பாற்றிச் சென்ற நான் எனது மகள் மூத்தவர் எனது குடும்பப் பொறுப்பை சுமந்தவர் என்னையூம் என் மற்றைய பிள்ளைகளையூம் பாதுகாத்தவர் செல்லடியில் அகப்பட்டு கால் பாதிப்புக்குள்ளானர் மகன். மற்றைய பிள்ளைகளையூம் பிரிந்து அநாதையாக மாத்தளனில் சிறியவர்களைச் சேர்த்துக்கொண்டேன் மூத்தமகன் கப்பல் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகாமில் சென்றுதான் அவரோடு தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது தெரியூம். தினமும் புலம்புவேன் எனது பிள்ளைகள் எனக்கு ஆறுதல் சொல்வர்கள். 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி எம்மை அரசபடையினர் காப்பாற்றி வாகனத்தில் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். எமக்கு என்ன நடக்குமோ என ஏங்கிய எம்மை குடியமர்த்தி 1 வருடமாக எமக்கு உணவூ உடைஇ சுகாதார வசதிஇ நீர் வசதி கல்வி வசதி ஏற்படுத்தித் தந்து எம்மை 2012 மாசி மாதம் எமது சொந்தக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டோம். இங்கு சில மாதங்கள் நிவரணம் வழங்கப்பட்டது. பின்பு வீடு கட்டுவதற்கு பணம் வழங்கப்பட்டு வீடு கட்டினோம். அதை நிறைவூ செய்வதற்கு பணம் போதாமையால் கடன் பெற்ற வீட்டு வேளைகளை நிறைவூ செய்தோம். தற்போது குடியிருப்பதற்கு ஒரு வீடு இருந்தாலும். நீர் பெரிய பிரச்சினை மின்சாரப் பிரச்சினை சுகாதார வசதியின்மை உண்டு. பெரிய வீட்டில் குப்பி விளக்கில் பிள்ளைகள் படிக்கிறார்கள். கட்டப்படாத மண்கிணறு இதில் இருந்து நீரைப் பெறுகின்றெளம். ஒவ்வொரு வருடமும் மண் இடிந்து போகும் திரும்ப மண்ணை எடுப்பதற்கு பணம் தேவை. இதனைப் பூர்தி செய்வது யார்? இதைவிட தற்போது அரசாங்கம் பொருட்களின் விலையைக் கூட்டியூள்ளது. மண்ணெண்னை இல்லை. நிவரணம் இல்லை. தொழில் பிரச்சினை அப்படி எத்தனையோ பிரச்சினைகள். முன்பு கட்டுப்பாடுடன் வாழ்ந்த எமது தமிழ் மக்களிடையே தான்தோன்றித்தனம் ஏற்பட்டுள்ளது. நாகரீக மோகம் ஏற்பட்டு போண் பாவனை மிஞ்சி மனிதனை மனிதன் மதிக்காத நிலைமையாக இருப்பதை இட்டு மனம் வேதனைப்படுகின்றது.

போர்   முடிவுக்கு வந்தாலும், அவை ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் என்றும் மறையாதது .இருந்தபோதும் பலர் இனியொருயுத்தம் கனவிலும் வேண்டாம் என்கின்றார்கள்! 




SHARE

Author: verified_user

0 Comments: