சோல்பரி யாப்பின் 29 ஆம் ஷரத்து அரசியலமைப்புக்களில் இருந்து நீக்கப்பட்டதன் விளைவாகவே நாட்டில் பல்வேறு குழப்பங்களும் இனங்களிடையேயான விரிசல்களும் மோதல்களும் உருவாகியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்திற்கு புதன்கிழமை 19.07.2017 பிற்பகல் விஜயம் செய்து கிழக்கு மாகாண நிலைமை மற்றுமு; நாட்டு நிலைமை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்துரையாடினார்.
சந்திப்பின்போது ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் ஷரத்தின் 2 ஆம் பிரிவு இணைக்கப்பட்டால் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு உறுதிப்படும்.
நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் இயற்ற முடியாது என்ற ஷரத்தை உள்வாங்குவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
எனவே சிறுபான்மையினர் மத்தியில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அச்ச நிலைமையை மாற்றும் விதமாக மீண்டும் அரசியலமைப்பில் இந்த ஷரத்தை இணைக்க வேண்டும்.
அதே போன்று பௌத்தை மதத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமையளிப்பது தொடர்பில் எமக்கு எந்த வித ஆட்சேபனையுமில்லை.
ஆனால் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களால் கடைப்பிடிக்கப்படும் ஏனைய மதங்கள் மற்றும் சமூகங்களுக்கும் உரிய அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்த வேண்டும்,
இதேவேளை நிதிக் கையாளுகை உட்பட மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் வலுவூட்டப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் வளங்கள் சமமாக பகிரப்படாமையினால் கிழக்கில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பில்லாத பிரச்சினை மற்றும் வறுமை ஆகியவை தொடர்பிலும் இவை அரசியல் அதிகார ரீதியில் உள்ள பிரச்சினைகளாலேயே ஏற்பட்டுள்ளன.
யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் பல கடந்த போதிலும் இன்னும் பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் படையினரிடமும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தொடர்ந்தும் மக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளன.
எனவே அவற்றை விரைவில் மக்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
காணி தொடர்பான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம்.” என்றார்.
அண்மைக்காலமாகஇனவாதக் குழுக்களால் முஸ்லிம்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் குறித்தும் தான் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் சிலாகித்துப் பேசியதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment