15 Jun 2017

உதவுவோரை வார்த்தைகளாலும் நடவடிக்கைகளாலும் ஊக்குவிக்க வேண்டும் மட்டு செஞ்சிலுவைத் தலைவர்

SHARE
மனிதர்க்கு மனிதர் உதவுதல் வேண்டும். எல்லோரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றனர். தங்கள், தங்கள் இயலுமைக்கேற்ற வகையில் அவர்கள் உதவுகின்றனர். ஆனால் சிலர் பிறருக்கு உதவுவதை மனித கடமையாகக் கருதி தங்களது நேரம், காலம், செல்வம், உழைப்பு என்பவற்றில் பெரும் பகுதியை பிறருக்காக அர்ப்பணிக்கின்றனர். இத்தகைய அர்ப்பணிப்பாளர்களை வார்த்தைகளினாலும் நடவடிக்கைகளினாலும் நாம் ஊக்குவிக்க வேண்டும். 


புதன் கிழமை (14) மட்டக்களப்பு இராஜபுரம் கிராமத்தில் தண்ணீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது அங்கு அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்….

ஒவ்வொரு கிராமத்திலும் தங்கள், தங்கள் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அந்த வரிசையிலே இராஜபுரம் கிராமத்திலும் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கிராமத்திற்காக பாடுபடுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அன்றைய கிராமத்தின் தலைவர், முன்னாள் அமைச்சர் சொல்லின் செல்வன் இராஜதுரையிடம் இடையிடாது கேட்டுக் கொண்டதற்கிணங்கவே இக்கிராமம் முழுவதற்கும் குடிநீர் கொடுத்துக் கொண்டிருக்கும் இங்கிருக்கும் குழாய்க்கிணறு அமைக்கப்பட்டது. 

தற்போது இந்நாள் தலைவர் ஆறுமுகம் இடையிடாது கேட்டதற்கிணங்கவே இந்த நீர்த்தாங்கி அமையப்போகின்றது. இந்த நீர்த்தாங்கியை அமைப்பதற்கான நிதியினை இப்பிரதேச இளைஞன் விஜய் தனது கோடீஸ்வர நண்பர் கோபிராஜ் நடா என்பவரிடமிருந்து பெற்றுள்ளார்;. நீர்த்தாங்கியை இராஜபுரம் கிராமத்தில் அமைப்பதற்கு இன்றைய பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பேரின்பராஜா அனுமதியைத் தந்ததோடு இவ்விழாவிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எமக்கெல்லாம் ஊக்கம் தந்து கொண்டிருக்கின்றார். இவர்கள் எல்லோரும் செய்கின்ற பணிகளையெல்லாம் ஊக்குவிக்கின்ற வகையிலே கிராமத்து மக்கள், கிராம உத்தியோகத்தர், கிராமத்தின் பிரமுகர்கள் என பலரும் இங்கே கலந்துகொண்டிருப்பதானது சமூகப் பணி செய்வோரை நிச்சயம் உற்சாகப்படுத்தும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்ப்பற்று பிதேச சபையின் செயலாளர் எஸ்.பேரின்பராஜா கலந்து கொண்டிருந்தார். மற்றும் அதிதிகளாக நிதியுதவியைப் பெற்றுக் கொடுத்த விஜய், போப்பாவெளி பாடசாலை அதிபரும் சமூக சேவையாளருமான ஆ.சோமசுந்தரம், கிராம உத்தியோகத்தர் எஸ்.கணேஸ், இராஜபுரம் விஸ்னு ஆலயக்குருக்கள் வீரையா, நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவி சாரதா, உறுப்பினர்கள் மகேஸ்வரி, சாந்தி உட்பட பலர்; கலந்து கொண்டிருந்தனர்  














SHARE

Author: verified_user

0 Comments: