15 Jun 2017

பொருத்தமில்லாத காலப்பகுதியில் ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் ஆட்சேபிக்கிறது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் பொருத்தமில்லாத காலப்பகுதியில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுவதை தமது சங்கம் ஆட்சேபிப்தாக  கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா இது விடயமாக புதன்கிழமை 14.06.2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆசிரியர் இடமாற்றத்திற்கான தேசிய கொள்கை என்று ஒன்றுள்ளது.
அந்தக் கொள்கையைப் பிற்பற்றியோ அல்லது மாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையிலோ ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் இடம்பெற வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு கொள்கைகளும் இல்லாது கிழக்கு மாகாணத்தில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் வருடாவருடம் இடம்பெற்று வருவது ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி அலுவலர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வருடத்தின் நடுப்பகுதியில் வருடாந்த இடமாற்றம் எங்குமே இடம்பெறுவதில்லை.
தேசிய இடமாற்றக் கொள்கையின்படி இடமாற்றத்தை விரும்பும் ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வேண்டி வலயக் கல்விப் பணிப்பாளர்களுடாகச் நடப்பு வருடத்தின் மே, ஜுன் மாதங்களில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் அந்த விண்ணப்பங்கள் கல்வி அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் இடமாற்றப்பட்டியல் ஓகஸ்ட் மாதத்தில் வலயக் கல்விக் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
அதில் ஏதாவது ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றினையும் உள்வாங்கி இறுதி இடமாற்றப் பட்டியல் நொவெம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு அந்த ஆண்டிறுதி விடுமுறைக்கு முன் வழங்கப்படல் வேண்டும்.
இது மாற்றலாகிச் செல்லும் பாடசாலைகளில் புதிய பாட ஒழுங்ககுகளை ஆசிரியர்கள், அதிபர்கள் மேற்கொள்வதற்கும், ஆசிரியர்கள் தமக்கான புதிய பாடசாலையைத் தெரிந்து அங்கு பணியாற்றச் செல்வதற்கும் நிருவாக அலுவலர்கள் தமது கடமைகளை சிறப்புற மேற்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

ஆனால், இந்த வித நிருவாக ஒழுங்குகள் எதுவுமே இல்லாமல் முறையற்ற விதத்தில் ஆண்டின் நடுப்பகுதியில் வழங்கப்படும் ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி உட்பட நிருவாகச் செயற்பாடுகள் அத்தனையும் குழப்பிப் போய் விடுகின்றன.

ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்த நிலையிலேயே ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை போன்ற முக்கியமான கல்வி நிகழ்வுகள் இடமபெறுகின்றன.

இவை ஒரு புறமிருக்க முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆசிரியர் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டியுமுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர் குழாம் ஒன்று இவ்வாறு தமக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளது. அவர்களது இடமாற்றங்களை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே இத்தகைய குழப்பகரமான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வலியுறுத்தி நிற்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: