நாட்டிலே நடைபெறுகின்ற சம்பவங்கள் இங்கு வாழுகின்ற அனைவருக்குமே ஒரு சவாலான விடயமாக மாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எங்களை நாங்கள் மீட்டெடுத்து. இந்த நாட்டின் சமாதானத்துக்கும் ஐக்கியத்துக்கும் எந்தக் கேடும் விளையாத வகையில் எங்களுடைய எதிர்கால சந்ததிக்குக் எந்தக் கேடும் விளையாத வளமான நாட்டைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்ற இவ்வருடத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் சமாதானத்தினையும், இன ஐக்கியத்தையும் சமத்துவத்தினையும் உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு வகையாக நான்கு இனங்களும் மதங்களும் இணைந்து வாழுகின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற ஐக்கியம் சமாதானம் என்பவவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில்தான் இந்த நிகழ்வை மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றது.
மதங்கள் என்பது மனிதனை வழிப்படுத்தவதற்கும், மனிதன் சமூக விதிகளுக்குட்பட்ட நடந்து கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைகின்ற ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுகின்றது. இந்த வகையிலே எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தினுடைய போதனைகளையுயும் உபதேசங்களையும் பார்க்கின்ற போது முழுமையாக சமூக நீதியைப் பேசுவததைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அது கிறிஸ்தவ மதமாக இருந்தாலென்ன, இந்து ,பௌத்த, இஸ்லாமிய மதமாக இருந்தாலென்ன ஒரு சமூகத்தில் மனிதன் புரிந்துணர்வோடும் அனுசரித்தும் நீதி பக்கச்சார்பற்ற முறையில் வாழ வெண்டும் என்பதற்காக பல நீதி விடயங்களைத் தொகுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
பெயர்களை நீக்கி விட்டப்பார்த்தால் அவற்றுக்குள்ளே போதிக்கப்படுகின்ற அனைத்துமே சமூக நீதி மட்டுமே. எனவே அந்தச் சமூக நீதிக்குள்ளே ஒழுங்கமைந்து வாழவேண்டியதுதான் இந்தச் சமூகத்தில் வாழுகின்ற அனைத்து இனத்தினருக்கும் வேண்டப்படுகின்ற ஒன்று. ஆனால் மதத்தின் பெயரால், அடையாளங்களால், சின்னங்களினால், மத வழிபாட்டுத் தலங்களினால் சமூகம் இன்று வேறு பட்டுப்பிரிந்து வன்முறைகளுக்குள்ளாகி நிற்கின்ற ஒரு பரிதாபகரமான நிலைமை இலங்கைக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் சொந்தமாகிக் கொண்டிருக்கிறது.
எனவே இங்கு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் ஐக்கியத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக இன்னொவரின் உரிமைகளை மதித்து வாழ வேண்டும் என்பதற்காக மதங்கள உருவாக்கப்பட்டு மத போதனைகள் அளிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இன்று வன்முறைக்கும் பிரிவினைக்கும் மனித அவலங்களுக்கு அடிப்படையாக மதங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் மத அனுஷ்டானங்கள் என்பதும் மதத்தின் பாற்பட்டுச் செயற்படுகின்ற அனைவரும் மதத்தின் பெயரால் மக்களை ஒன்று படுத்துகின்ற கடமையில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே தான் இப்தார் நிகழ்வானது மதம் சார்ந்த நிகழ்வாகப்பார்க்கப்படாமல் சமூகம் சார்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படவேண்டும். சமூகத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து மதித்து, அனுசரித்து நடக்கின்ற ஒரு வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
இந்த மனோ பக்குவம் மனிதர்களிடையே உருவாகவேண்டும். அதனைத்தான் சமூகம். இந்த நாடு, இந்த நாட்டிலிருக்கின்ற அரசியல் தலைமைத்துவமும் எதிர்பார்க்கின்றது என்றார்.

0 Comments:
Post a Comment