15 Jun 2017

கட்டுரை:துறைநீலாவணைக் கண்ணகியம்மன் ஆலயம்

SHARE
துறைநீலாவணைக் கண்ணகியம்மன் ஆலயம்.

ஆலய அமைவிடம் :-

துறைநீலாவணைக் கண்ணகியம்மன் ஆலயமானது வடஅந்தத்தில் கிழக்கும் தெற்கும் வயல் நிலங்களாலும், மேற்கும் வடக்கும் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்றுள்ளது. கோயிலைச்சுற்றி சிறுகுன்றுகளும் அதன்மேல் தலவிருட்சமான புங்கமரமும் நிறைந்து காணப்படுகின்றது. குன்றுகள் புடைசூழக் காணப்படுவதனால் கல்லடி அம்மன், கல்லடிநாச்சி எனவும் அம்மனை அழைப்பர்.அம்மன்ஆலயம் வடக்குமுகம் நோக்கியதாகக் காணப்படுகின்றது.

ஆம்மன் ஆலயத்தைச்சுற்றி நாகதம்பிரான், வதனமார், வைரவர் ஆலயங்களும் 15 காவல் தேவதைகளுக்குமான மேடைகளும் காணப்படுகின்றது.

ஆலயவரலாறு:-

தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் காடடர்ந்த பகுதியாகக் காணப்பட்டதனால் முனிவர்கள் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்தனர். பின்னர்  அவர்கள்; இடம்பெயர்ந்த போது தங்களால் வழிபடப்பட்ட சிலைகளை அப்படியே கைவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஏதோ காரணத்திற்காக மக்கள் இப்பகுதியில் ஊடாடிய போது முனிவர்களால் விட்டுச் செல்லப்பட்ட மூன்று அம்மன்சிலைகளையும் (இதில் ஒன்று கண்கள் திறக்கப்பட்ட அகோரவடிவம் கொண்;டது), சித்திர வேலைப்பாடுகள் கொண்ட இரண்டுசோடி முக்கோணச்சிலம்புகளையும்;, தண்டைச்சிலம்பு இருசோடிகளையும் கண்டு ஒருபுறம் பயமும் மறுபுறம் பக்தியும் கொண்டமக்கள் அயற்கிராமமான குறுமண்வெளியில் வசித்துவந்த கெங்காதசி ஐயரை அழைத்துவந்து காண்பித்தபோது இது கண்ணகி வழிபாட்டிற்குரிய சிலைகள் என்றும், பூசை செய்வதற்குரிய விதிமுறை அடங்கிய “பத்ததி” ஒன்றையும் கையளித்தார். இன்றுவரை இப்பத்ததி முறையைப் பின்பற்றியே பூசைகள் நடைபெறுகின்றது. 

திருவிழா:-

வைகாசி மாதத்தில் வரும் பூர்வபட்சத்தில்பூரணையை திருவிழாக்காலத்துள் ஒருநாளாகக் கொண்டது. சடங்கானது  7 நாட்கள்  இடம்பெறும். செவ்வாய் இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி திங்கள் அதிகாலை (செவ்வாய்க்கிழமை வைகறையில்) திருக்குளிர்த்தியுடன் சடங்கு நிறைவுறும்.
திருச்சடங்கானது ஊர்மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும்  பொதுவிழாவாகக் காணப்படுகின்றது. இக்காலகட்டத்தில் வீடுகள் தெருக்கள் எல்லாம் துப்புரவு செய்யப்பட்டு வீதிகள் தோரணங்களாலும் கொடிகளாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கிராமமே ரம்மியமாகக் காட்சியளிக்கும்.
இந்துக்களின் பண்டிகைகளான தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு போன்றவற்றிற்குப் புத்தாடை அணியாதவர்களும் அம்மன் சடங்கிற்குப் புத்தாடை அணிவர். சடங்கு காலத்தில் புலால் உண்பதை ஊர்மக்கள் அனைவரும் தவிர்ப்பர். மேலும் மா வறுத்தல், சுண்டல்கறி சமைத்தல்,பொரித்தல் போன்றவற்றை மக்கள் தவிர்ப்;பது நோக்கற்பாங்கது.

பூசைப்பொருட்கள் கிராமத்தின் ஆரம்பத்தில் அமைந்துள்ள தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி மூலம் மேள தாளங்களுடன் ஆலயத்திற்கு எடுத்து வரப்படுவது தொன்றுதொட்ட மரபாகக் காணப்படுகின்றது.

திருவிழாக்காலங்களில் வழக்குரைக்காதை படிப்பது மரபாகும். ஆலயத்தில் பன்னெடுங்காலமாக ஓலைச்சுவடியினால் (1880 ஆம் ஆண்டு) எழுதப்பட்ட வழக்குரைக்காதை காணப்படுவது சிறப்பாகும்.

பூசையானது மத்தியானம், இரவு ஆகிய இரண்டுவேளைகளில் இடம்பெறும்.
வெள்ளிக்கிழமை இரவு அம்மன் ஊர்வலம் இடம்பெறும் இதன்போது வானவேடிக்கைகள்முழங்க, எரிபந்தங்கள்ஒளிர, கும்மி கோலாட்டம் புடைசூழ அம்மனை முத்துச்சப்பரத்தில் வைத்து கிராமத்திலுள்ள வீதிகள்வழியாக  ஊர்வலமாக எடுத்துச்செல்வர். மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் நிறைகுடங்களை வைத்து வழிபடுவர். ஊர்வலத்தின்போது கிராமத்திலுள்ள சித்திவிநாயகர் ஆலயம், தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம், உச்சிமகாகாளி ஆலயம்,மாரியம்மன் ஆலயம் போன்றவற்றிற்குச் சென்று வழிபாடுகளில்  ஈடுபடுவது மரபாகும். 

ஞாயிறுகாலை:-

மக்கள் ஞாயிறு காலைமுதல்;தங்களது நேர்த்தியை நிறைவேற்றுவதற்காக உபவாசம் இருந்து கற்பூரத்தீச்சட்டி, வாயலகு, காவடி, அங்கப்பிரதட்சணை போன்ற கருமங்களில்ஈடுபடுவார்கள்,இது தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பிரதான வழியாகப் பறைமேளம் சகிதம்  கண்ணகியம்மன் ஆலயத்தை நோக்கி இடம்பெறும். இதைப்பார்ப்பதற்காக சிறுவர்முதல் பெரியோர் வரை வீதியின் இருமருங்கும் குழுமியிருப்பர் இதனால் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் ஊரின் பிரதான வீதியினூடாகப்போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலைகாணப்படும்.

காவடி எனும் போது சிறுவர்கள் பாற்காவடியும் ஏனையோர் முள்ளுக்காவடி, பறவைக்காவடியையும் எடுப்பர். 

ஞாயிறு மத்தியானம் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெறும் இந்நிகழ்வுக்கு மக்கள் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளச் செல்வதுபோல தங்களை அழகுபடுத்திக் கொள்வர். ஆலயமோ மக்கள் வெள்ளத்தால் நிரம்பிவழியும். இப்பூசையின்போது தெய்வங்கள் ஆடுவதும் கட்டுச்சொல்வதும் மக்களுக்கு பக்தியையும் களிப்பையும் ஏற்படுத்துகின்றன.

கல்யாணக்கால் பூசையில் முக்கியம் பெறுவது சிலம்பு அபிஷேகமாகும். சிலம்பு எனும்போது ஆதியிலே இருந்த முக்கோணச்சிலம்பு இருசோடியும் காற்சிலம்பு இருசோடியுமாகும். அபிஷேகம் முடிந்ததும் உருவேற்றப்பட்ட சிலம்பு அதற்கெனத் தயாரிக்கப்பட்ட ஓலைப்பெட்டியினுள்வைத்து பூசையில்வைக்கப்படும். பூசைமுடிவுற்றதும் சிலம்புப்பெட்டியைத் தூக்கிச்செல்வதற்காக உபவாசம் இருப்பவரின் தலையில் பெட்டி ஏற்றப்படும் . பின்பு பிரதானவீதிவழியாகச் சென்று சித்திவிநாயகர், தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயங்களின்  பூசைநிகழ்வுகளில் கலந்து கொண்டு கன்னிக்கால் வெட்டும் இடம்நோக்கிப் புறப்படுவர். இதன்போது அம்மன்பெட்டியை எடுத்துச் செல்பவர் உருக்கொண்டு ஆடுவதும்,சுயநினைவை இழப்பதும் பக்தியின் வெளிப்பாடாகும்;.

கன்னிக்கால் வெட்டும் கம்பானது அம்மனின் ஆஞ்ஞைப்படி வெளிப்படுத்தப்படும். பூவரசுமரத்தின் கிளையையே கன்னிக்காலாக கொள்வது மரபாகும். கன்னிக்கால் வெட்டும் இடத்தைச் சென்றடைந்ததும். தெய்வங்கள் கம்பை நோக்கிகூக்குரல் எழுப்பியவண்ணம் ஆடும். கன்னிக்கால்கிளைக்கு நீர்ஊற்றி திருநீறு, சந்தணம், குங்குமம், தாமரைப்பூ சாத்தி தூபதீபங்கள் காட்டிய பின்பு. மரத்தின் அடியில் மூன்று மடைவைக்கப்பட்டு அவற்றின் மீது  சிலம்புகளை வைத்துப் பூசை செய்வர். பூசை நிறைவுற்றதும் பூசகர்களில் இருவரில் ஒருவரால் கன்னிக்கால் வெட்டப்படும். வெட்டும் மரக்கிளையானது மரத்திலிருந்து வேறாகும் போது கன்னிக்காலை வெட்டுபவர் சுயநினைவை இழந்து விடுவார்.

வெட்டப்பட்ட கன்னிக்காலின் பட்டை நீக்கப்பட்டு மஞ்சள் நீர்கொண்டு சுத்தம் செய்து விபூதி, சந்தணம், குங்குமம் அணிவிக்கப்பட்டு சேலையினால்  சுற்றப்பட்டுப்  பூசகர்கள் தமது வலது தோள் மீது வைத்து ஆலயத்திற்கு எடுத்துச்செல்வது வழமை.

கன்னிக்கால் வெட்டியதும் சிலம்புகளின் அகோரம் தணிந்துவிடும். மரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த மடைப்பொருட்களைப் பெறுவதற்குத் திருமணமாகாத பெண்கள்  முண்டியடிப்பர். இவ்வாறு மடிப்பிச்சை பெறுவதால் திருமணப்பாக்கியம் கைகூடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.


ஆலயத்தைச் சென்றடைந்ததும் ஆலயத்தைச் சுற்றிவந்து கன்னிக்கால் நாட்டும் இடத்திலுள்ள குழியினுள் நவதானியம், பொன் வெள்ளி இட்டு எல்லோரும் ஒருமித்துக்கன்னிக்காலைப் பற்றிப்பிடித்துக்குழியினுள் இடுவர். பின்பு தூபதீபங்களுடன் பஞ்சபுராணம் ஓதப்பட்டுப் பூசை நிறைவுறும்.

ஞாயிறு இரவு:-

கன்னிக்காலைச் சுற்றி நான்கு மூலைகளுக்கும் நான்கு கம்புகள் கொண்டு பந்தல் அமைக்கப்படும்.இது  சேலைகளாலும் மின்விளக்குகளாலும். மாவிலை, வெற்றிலை, வாழைப்பழம் கொண்டும் அலங்கரிக்கப்படும். இதற்குத்தேவையான சேலைகள்; நேர்த்தியாகமக்களால் வழங்கப்படுவதுவழமை. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிவுற்றதும் கல்யாணக்கால் பந்தலின் நான்கு மூலைகளுக்கும் நான்குநிறைகுடம்வைத்து மடைவைக்கப்படும். பின்னர் கல்யாணப் பூசைக்கு தேவையான தாலி, கூறை,பலகாரம், தாம்பூலம், நிறைகுடம் என்பன கிராமத்திலிருந்து மேற்கட்டி பிடித்து மேளதாளம், பட்டாசு, வானவேடிக்கைகள் சகிதம் ஆலயத்திற்கு எடுத்துவரப்படும். ஆலயத்தை அடைந்ததும் ஆலயநிர்வாகிகளால் பூசைப்பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும்.(பெட்டிமாற்றுதல்). பின்பு கன்னிக்காலில் அம்மனின் உருவச்சிலையை வைத்து மாங்கல்யதாரணம் செய்து பன்னீர் தெளித்து. தீபங்கள் காண்பித்துத் பூசைசெய்வர். 

திங்கள்பகல் :- 

இப்பூசை வட்டுக்குத்தும்பூசை அல்லது நெல்குற்றும்பூசை என அழைக்கப்படும். இதில் பெண்கள் அதிகஅளவில் கலந்துகொள்வது சிறப்பம்சமாகும். ஆலயத்தில் மலைக்குன்றில் நெல்குற்றுவதற்கு ஏற்றவகையில் குழியாக்கப்பட்ட  இடத்தை சமுத்திர நீர் கொண்டு குற்றம் நீக்கப்பட்டு உரல், உலக்கைகளுக்கு விபூதி சந்தணம் குங்குமம் பூசி வஸ்த்திரம் அணிவித்து நோர்ப்புக்கட்டிய பின்னர்  பிரதம பூசகர் இரண்டு கைகளாலும்; மூன்று தடவைகள் நெல்லை அள்ளி இட்டபின்னர் பிரதம பூசகரும் வண்ணக்கரும் இணைந்து மூன்றுதடவைகள் உலக்கையைக் குற்றுவர் இவர்களிடமிருந்து பெண்கள் உலக்கையைப் பறித்து பின்புகுற்றுவர். பிள்ளைப்பாக்கியமற்றவர்கள் உபவாசமிருந்து இவ்வாறு செய்வதனால் குழந்தைப்பேறு பெறுகின்றனர் அதுவும் பெண்பிள்ளைப் பேறே கிடைக்கின்றன. 

வட்டுக்குற்றுவதன் மூலம் பெறப்படும் அரிசியையே  குளிர்த்திப் பொங்கலுக்குப் பயன்படுத்துவர். வட்டுக்குத்துப் பூசைக்குத் தேவையான நெல் பெண்களால் வீடுவீடாகச் சென்று மடிப்பிச்சை பெறுவதனூடாகச் சேரிக்கப்படுகின்றது. 

திங்கள் அதிகாலை:- 

கன்னிக்கால் பந்தலுக்கு எதிரில் குளிர்த்தி மடைவைக்கப்படும் இது சாதாரணமான மனிதனின் தொப்புள்க் கொடி உயரத்திற்குக் காணப்படும். பின்பு ஆலயமுன்றலில் மூன்று பானைகளில்  பொங்கல் இடம்பெறும் இதில் நடுவிலுள்ள பானை விநாயகர்பானை என அழைக்கப்படும். பொங்கல் வெண்பொங்கலாகவே அமையும்.  பொங்கல் முடிந்த பின் ஓலைப்பெட்டியினுள் நெல் இடப்பட்டு அதன்மேல் பொங்கல்பானைகள் இறக்கிவைக்கப்படும்.

பின்னர் பொங்கல் படைக்கப்பட்டுப் பூசை இடம்பெற்றபின்னர் பிரதம பூசகர் சேலையணிந்து அம்மனைப்போல் பாவனைதரித்து அம்மன்சிலையையும் பிரம்பையும் கையில் எடுத்ததும் அகோர உருக்கொண்டு காணப்படுவார். அம்மனை குளிர்த்தி மடைக்கு முன்கொண்டுவந்ததும் குளிர்த்திக்கதை இருவரால் பாடப்படும். இப்பாடலைக்கேட்க அம்மனின் அகோரம் படிப்படியாகக் குறைவடைந்து செல்லும். இதேவேளைஆலயமுன்றலில் மைந்தன், கும்மி ஆடப்படுமிடத்திற்கு அம்மன் சென்றதும் அம்மனைச் சூழ்ந்து மைந்தன் ஆடுவார்கள். அகோரம் தணிந்த அம்மன் ஆலயத்தினுள் சென்றதும் மங்களம்,வாழி பாடப்பட்டு அம்மனின் திருக்கதவு அடைக்கப்படும்.இத்துடன் சடங்கு இனிதே நிறைவுறும்.

ஏனைய பூசைகள்:-

# அம்மன் சடங்கிற்குத் தேவையான வாழைக்குலை ஆலயத்திற்கு அருகிலுள்ள வயிற்றுப்பிள்ளையார் ஆலயத்திலேயே பழுக்க வைப்பது மரபாகும். இக்காலத்தில் நாகங்கள் இவற்றைக் காவல் செய்வதாக மக்கள் நம்புகின்றனர். அம்மன் சடங்கு முடிந்து மூன்றாம் நாள் (வியாழக்கிழமை) நண்பகல் வயிற்றுப்பிள்ளையார் ஆலயத்தில் மூன்றாம் சடங்கு இடம்பெறும்.

# சடங்கு நிறைவுற்று எட்டாம் நாள் அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள காவல் தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் 8ஆம் சடங்கு இடம்பெறும் (தெய்வங்களுக்கு நன்றிதெரிவிக்கும்முகமாக). இதற்கு அரிசிமாரொட்டி, பொங்கல் என்பன தயாரிக்கப்படும்.

# தைப்பூச நாளில்  அம்மனின் கதவுதிறந்து செய்யும் திருவிழாப்பூசையைப் போல் இரவில்பூசை இடம்பெறும்.

# வெள்ளிக்கிழமை தோறும் மத்தியானப் பூசை இடம்பெறும். இப்பூசைக்கான நைவேத்தியமாக மக்கள் துள்ளுமா, பொங்கல் பாணக்கம் என்பவற்றை வழங்குவர்.


அம்மனின் அற்புதங்கள்:-

# முனிவர்களால் கைவிட்டுச்செல்லப்பட்ட அம்மன் உருவங்களில் ஒன்று கண்கள் விழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதைவைத்து வழிபட்டபோது வருடாவருடம் பூசகர் இறப்பது வழமையாக அமைந்தது. இதனால் பூசைசெய்ய யாரும் முன்வராத நிலையில் அம்மன் கனவில் தோன்றி கண்கள் விழிக்கப்பட்ட சிலையை ஆலயத்திற்கு எதிரே நான்கு வாவிகளும் சந்திக்கின்ற இடத்தில் இடுமாறும், அம்மனுக்குப் பூசைசெய்கின்ற வேளையில் வாவிக்கு மூன்றுமுறை தீபம் காட்டவேண்டும் எனவும்பணிக்கப்பட்டது. அவ்வாறு செய்ததன் பின்னர் பூசகர் வருடா வருடம் இறக்கின்ற நிலமைமாறிவிட்டது. 
தற்போதும் பூசை நடைபெறும் வேளையில் வாவிக்கு மூன்று தடவை தீபம் காட்டுவதும் மேலும் ஆலயத்தில் ஆடும் தெய்வங்கள் வாவியை நோக்கி பாய்ந்து ஓடுவதும்இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

# முற்காலத்தில் துறைநீலாவணைக் கிராமத்தில் பாம்புதீண்டலுக்குள்ளாகி பலர் இறந்தனர். இச்செயலால் மக்கள் வேதனையும் துன்பமும் அடைந்த வேளையில் அம்மன் பூசகரின் கனவில் தோன்றி நாகதம்பிரானுக்கு ஒரு ஆலயத்தை அமைக்குமாறும் அதற்கான இடம் கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதெனவும் பணித்தார்;. காலையானதும் வண்ணக்கர் சகிதம் பூசகர் ஆலயத்திற்குச் சென்றபோது மரக்கிளைகளைக் கொண்டு இடம்   அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்ணுற்று மக்களின் உதவியுடன் நாகதம்பிரான் ஆலயம் அமைக்கப்பட்டதுஇதனால் பாம்புகளின் தீண்டுதலுக்கு இலக்காகும்அளவு வெகுவாகக் குறைந்தது. பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.

# முஸ்லிம் வியாபரியொருவர் வாவியினூடாக மரக்கலத்தில் வந்தபோது ஆலயத்தை “அம்பலம்” எனக்கருதி புலால் உணவைப் புசித்து ஓய்வெடுத்துள்ளார். மரக்கலத்தில் வியாபாரியை ஏறவிடாது நாகங்கள் விரட்டியமையால் பூசகர் வந்து குறைகளை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய நாகங்கள் அகன்று சென்றதாகவும். அதன்பின்னர் வியாபாரியால் ஆலயத்தித்திற்கு வெண்கலத்தாலான விளக்கொன்றும் தங்கத்தாலான நாக உருவமொன்றும் நேர்த்தியாக வழங்கப்பட்டது. இவை தற்போதும் ஆலயத்தில் காணப்படுகின்றது.

# இங்குள்ள நாகங்களை மருந்து மந்திரங்களினூடாக ஏமாற்றிஆலயத்திலே உள்ள வெண்கலப்பொருட்களைக் திருடிச்சென்ற வேளையில் மருந்து மந்திரங்களிலிருந்து விடுபட்ட நாகங்கள் கள்வர்களை ஓந்தாச்சிமடம் எனும் இடத்தில் வைத்து நகரமுடியாது தடுத்தது. இதை அறிந்த பூசகர் ஆலய நிர்வாகிகள் சகிதம் சென்று பொருட்களை மீட்டுவந்தமை.

# 1990ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஆலயச்சூழலில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரில் ஒருவர் பாம்புதீண்டியதனால் மரணித்ததாகவும், மேலும் ஆலயத்தினுள் இரவு வேளையில் மணியோசை, பறையொலி கேட்க பயமுற்ற இராணுவத்தினர் பூசகரை அணுகி ஆலயத்தைத் திறந்து பார்த்தபோது ஆலயத்தினுள் எதுவும் தென்படாமையால் ஓரிரு நாளிலேயே முகாமை அகற்றியமை.


# தற்போதும் ஆலயப்பொருட்கள் வெளியில் கிடந்தாலும்; எவரும் எடுத்துச்செல்ல முன்வராத நிலைகாணப்படுகின்றமை. அவ்வாறு கொண்டு சென்றால் தங்களின் இல்லங்கள் நோக்கி நாகங்கள் வருகின்ற நிலைகாரணமாக.

# தற்போதும் மக்கள் வெள்ளிக்கிழமைதோறும் நாகங்கள் உண்பதற்காக  “பாணக்கம்” வைக்கின்ற நிலைகாணப்படுகின்றது. 












ஊடக அனுசரணையும், ஆக்கமும்,
க. விஜயரெத்தினம்,
(பிரதேச ஊடகவியலாளர்)  
துறைநீலாவணை (0778602831)
















SHARE

Author: verified_user

0 Comments: