நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி இருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றைச் சேகரிக்கும் மாபெரும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 28.05.2017 ஏறாவூர் நகரெங்குமுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று நிவாரண சேகரிப்பில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளதாக செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
நிவாரண சேகரிப்பு நடவடிக்கையில் ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமாசபை. சிவில் அமைப்புக்களன் ஒன்றியம், தோழமைக் கழகம், விளையாட்டு கழகம், அல் ஹஷ்ஸால் அமைப்பு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிவாரண சேகரிப்பு ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களுக்கு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டும் இதே காலப்பகுதில் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏறாவூரிலிருந்து சுமார் 35 இலட்ச ரூபாய் பெறுமதியான பணமும் நிவாரணப் பொருட்களும் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக நஸீர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment