மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையினால் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளற்ற வெசாக் தின ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பேரவையின் விழாக்குழுத் தலைவர் எம்.எஸ். அபுல் ஹஸன் தெரிவித்தார்.
வெசாக் விடுமுறை தினமான எதிர்வரும் வியாழக்கிழமை (11.05.2017) மட்டக்களப்பு நகர பொலிஸ் நிலைய முன்றலில் மாலை 6 மணி தொடக்கம் வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனையிட்டு பொதுமக்கள் உட்பட அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்றைய தினம் இடம்பெறவுள்ள வெசாக் சோடனை, தோரணங்கள், மின்னொளிக் காட்சிகள் உட்பட மற்றுமுள்ள நிகழ்வுகளைப் பார்க்க வருபவர்களுக்கு தாளித்த கடலை தன்ஸலவும் தமது பேரவையினால் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பன்மைத்துவ கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு பல் இனங்கள் ஒன்றித்து வாழ்கின்ற நாட்டில் அடுத்த சமூகத்தவரின் கலாசார பண்பாட்டு வாழ்வியல் அம்சங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் பரஸ்பர புரிந்துணர்வோடு இன மத பேதங்களின்றி வாழ்வதற்கும் இத்தகைய நிகழ்வுகள் அவசியம் என்று ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான செயற்பாட்டாளருமான அபுல் ஹஸன் மேலும் வலியுறுத்தினார்.
0 Comments:
Post a Comment