முழு நிறைவான தீர்வுத் திட்டத்தை நோக்கி முழுமனதுடன் நல்லாட்சி நகரவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.
சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகியவை இணைந்து எருவில் கண்ணகி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை 22.04.2017 நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மஹிந்த ஆட்சியின்போது அதிருப்தியுற்ற மூவின மக்களின் வாக்குப்பலத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி சிம்மாசனம் ஏறியும் இனப்பிரச்சினைக்கான அனைத்து தீர்வினையும் இதுவரை வழங்கியதாக இல்லை.
அதேவேளை, நல்லாட்சி அரசு எமது தமிழ்த் தலைமையின் வேண்டுகோள்கள் சிலவற்றிற்கு ஓரளவு செவிசாய்த்து ஒருசில விடயங்களில் சில தளர்வுப்போக்கினை கடைப்பிடித்து வருகின்றது ஆனால் தமிழருக்கான உரிமை வழங்கல் விடயத்தில் முற்றுமுழுதான தீர்வுத் திட்டத்தினை மனத்தில் நிறுத்தி செயற்படவில்லை.
இந்த நாட்டிலே ஏனைய சமூகங்களுக்கு இருக்கும் அனைத்து அந்தஸ்தும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அஹிம்சை வழியிலும். ஆயுத ரீதியாகவும் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றோம்.
ஆனால் இந்த நாட்டில் உள்ள சிங்கள மேலாதிக்கம் எமக்கான நிரந்தரத் தீர்வினை தருவதற்குத் தயாராக இல்லை என்பதை வரலாறு நெடுகிலும் காண்கின்றோம்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்று ஒரு பூர்வீகம் இருக்கின்றது.
அதன் அடிப்படையில் தமிழர்களுக்கும் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதை பேரினவாத அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த முறை எமது மக்கள் சித்திரை புத்தாண்டை மனதளவில் கொண்டாடவில்லை காரணம் இந்த நாட்டிலே கடந்த பல வருடங்களாக எமது உறவுகள் சிறையிலே வாடிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களை விடுதலை செய்வதற்காக எமது தலைமைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் போராடி வருகின்றார்கள் அதே போன்றுதான் இன்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று பாதையோரத்தில் பாயை விரித்து தங்களுக்கான தொழிலைக் கேட்டு மாதக் கணக்கில் போராடி வருகின்றார்கள் அதே போன்றுதான் மஹிந்த அரசாங்கத்தில் எமது மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருந்தது அந்த நிலங்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வீதியோரத்தில் கிடந்து போராட வேண்டிய நிலை உள்ளது.
எமது மக்கள் நலன் சார்ந்த எத்தனையோ பிரச்சனைகள் இன்று முடிவிற்கு வராத நிலையே இந்த நாட்டிலே இன்றும் இருந்து வருகின்றது.
இந்திய நாட்டிலே பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்திய அரசு தடைவிதித்த போது அதனை எதிர்த்து அங்குள்ள வீரத்தமிழர்கள் போராடி வெற்றி பெற்று தங்களது பண்பாட்டு பாரம்பரியங்களை காப்பாற்றினார்கள் அதே போன்றுதான் எமது மக்களும் எங்களது பண்பாட்டு பாராம்பரியங்களை என்றைக்குமே அழியாமல் பாதுகாக்க வேண்டும் அதற்கு ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும்”

0 Comments:
Post a Comment