தமிழர்களின் வேதனைகளைச் சுமந்ததாகவே இம்முறை தமிழ் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்தது என கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா துயரம் வெளியிட்டார்.
சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகியவை இணைந்து எருவில் கண்ணகி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை 22.04.2017 நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரசன்னா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், யுத்தம் இடம்பெற்ற போதும் கூட தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் என்பவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அக்கறை காட்டினார்கள். இது உலகறிந்த விடயம்.
அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த கால கட்டத்தில் எமது இளைஞர்கள் சற்றும் விலகாமல் இருந்து தமிழ் மக்களுடைய பாராம்பரியங்களை கட்டிக்காத்து வளர்த்து வந்தார்கள்.
இந்த நாட்டிலே வருகின்ற மிக முக்கியமான வருடப்பிறப்பான சித்திரைப் புத்தாண்டு தமிழ் சிங்களப் புத்தாண்டு எனக் கூறப்பட்டாலும் அது இன ஒற்றுமையின் அடிப்படையிலல்hமல் வெறும் வாய்ப்பேச்சளவிலேதான் உள்ளது.
காணமால் போன எமது உறவுகள், விடுபடாமல் இருக்கும் காணிகள், படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகள், தேசிய விடுதலைக்காக சென்ற எங்களது போராளிகளினது விடுதலைகள் அதனை நினைத்து ஏங்கித்தவிக்கும் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் பட்டம் பெற்று வீதியோரங்களில் அகிம்சை ரீதியான போராட்டங்களை மேற்கொண்டு வரும் பட்டதாரிகள் என பலரும் மிகவும் வேதனையான துன்ப துயரங்களை சந்தித்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்ட்ட தமிழ் மக்கள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டேதான் இருக்கின்றார்கள்.
இவ்வாறு துயரங்கள் தொடரும்போது எவ்வாறு சித்திரைப் புத்தாண்டினை மனதளவிலே சிறப்பாகக் கொண்டாட முடியும் ஆகவே தமிழ் சித்திரை புத்தாண்டு தமிழ் மக்களை பொருத்தவரையில் வேதனை தரும் ஆண்டாகவே இருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம் இவ்வாறான சம்பவங்களைக் கண்டும் காணாமலும் இருக்கின்றது ஆனால் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்களுடையதும் சிங்களவர்களுடையதும் என்று உதட்டளவில் கூறிக்கொண்டு வெளி உலகை ஏமாற்றி வருகின்றார்கள்.
இனவாத அரசு தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமை என்று சர்வதேசத்திற்கு காட்டுகின்றதே தவிர தமிழர்களது சமத்துவம், சுயநிர்ணய உரிமை, நிரந்தரத்தீர்வு என்பவற்றை கொடுப்பதற்கு தயங்குகின்றார்கள் இது காலாகாலமாக நடைபெற்று வரும் துன்பியல் தொடராகும்” என்றார்.

0 Comments:
Post a Comment