மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய பிரதேச ஆற்றுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் காட்டு மரங்கள் அழிப்பு ஆகியவற்றால் தங்களது வாழ்வாதாரத்திற்கும் சூழலுக்கும் அருகிலுள்ள கிராமங்களுக்கும் ஏற்பட்டு வரும் அழிவுகளை நிறுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை 25.04.2017 இலுப்படிச்சேனை பிரதேச பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதிகாரிகள் இந்த சட்டவிரோத மண் அகழ்வுக்கு பெருந்தொகை கையூட்டுக்களைப் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் மறைமுக அனுமதியளித்து வருவதாகவும் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்தும் நகரப் பகுதிகளில் வாழும் பண முதலைகளின் இந்த சட்டவிரோத மண் அகழ்வு விவகாரம் இத்தோடு நிறுத்தப்படாவிட்டால் தாங்கள் தொடர் போராட்டங்களை நடாத்தப் போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஸ்தலத்தரிற்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
சட்டவிரோத மண் அகழ்வால் ஆற்றுக் கரைகளின் இயற்கை வழிகள் பெருவெள்ளத்தில் அரித்துச் செல்லப்படுவதாகவும், போக்குவரத்துப் பாதைகள், வயல்வெளிகள், மக்கள் குடியிருப்புக் கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment