(துறையூர் தாஸன்)
தமிழ் அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் இன முறுகலை ஏற்படுத்தும் வண்ணம் காணி வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
சட்டத்துக்கு விரோதமாக செயற்படும் அவ்வாறான அரச அதிகாரிகளை மாவட்டத்தை விட்டு வெளியேற்றினால் மாத்திரமே தமிழ் முஸ்லிம் மக்களைக் காணி அபகரிப்பிலிருந்தும் இன முறுகலில் இருந்தும் காப்பாற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய பிரதேச ஆற்றுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் காட்டு மரங்கள் அழிப்பு ஆகியவற்றால் தங்களது வாழ்வாதாரத்திற்கும் சூழலுக்கும் அருகிலுள்ள கிராமங்களுக்கும் ஏற்பட்டு வரும் அழிவுகளை நிறுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை 25.04.2017 இலுப்படிச்சேனையில் பிரதேச பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதிகாரிகள் இந்த சட்டவிரோத மண் அகழ்வுக்கு பெருந்தொகை கையூட்டுக்களைப் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் மறைமுக அனுமதியளித்து வருவதாகவும் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்தும் நகரப் பகுதிகளில் வாழும் பண முதலைகளின் இந்த சட்டவிரோத மண் அகழ்வு விவகாரம் இத்தோடு நிறுத்தப்படாவிட்டால் தாங்கள் தொடர் போராட்டங்களை நடாத்தப் போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வியாழேந்திரனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
சட்டவிரோத மண் அகழ்வால் ஆற்றுக் கரைகளின் இயற்கை வழிகள் பெருவெள்ளத்தில் அரித்துச் செல்லப்படுவதாகவும், போக்குவரத்துப் பாதைகள், வயல்வெளிகள், மக்கள் குடியிருப்புக் கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடி பதுளை வீதியில் கொடுவாமடு தொடக்கம் புல்லுமலை வரையிலான பகுதிகளில் பாரிய மண் அகழ்வு கனரக வாகனங்கள் மூலமாக இரவு பகலாக இடம்பெறுகின்றது.
இதில் நகரப் பகுதிகளில் வாழும் தனவந்தர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
அங்கு ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவித்த வியாழேந்திரன் - இப்பகுதிகளில் சட்டவிரோதமான மண் அகழ்வு, கால்நடைகள் கடத்தப்படுதல், காட்டு மரங்களை அழித்தல் என்பன நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது.
இதனால் எமது பிரதேசத்தின் இயற்கை வளங்கள் மோசமான முறையில் சுரண்டப்படுகிறது இந்த நவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் மண் கொள்ளையில் ஈடுபட்ட அதே நபர்கள்தான் தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிலும் மண் கொள்ளையில் ஊழல் மோசடிகளிலும் ஈடுபடுகின்றார்கள்.
தன்னுடைய பொலன்னறுவை மாவட்டத்தில் சட்ட சிரோத மண் அகழ்வை நிறுத்திய நல்லாட்சியின் ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் இயற்கை வள அபகரிப்பை, அழிப்பை தடுத்து நிறுத்த முடியாமலுள்ளது துரதிருஷ்டமாகும்.
யுத்தம் முடிவடைந்த பின்பு மாவட்டத்தி;ல் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விற்கும் நடவடிக்கையினை ஒருசில தமிழ் அரச அதிகாரிகள் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை எவரும் மறுக்க முடியாது. ஆயினும் எவ்வழியிலேனும் இதனைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.” என்றார்.

0 Comments:
Post a Comment