புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் ஒதுங்கி தனிமைப்பட்டு இருக்காது முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என தான் ஆதங்கம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளிக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்திற்காக சுய தொழிலுக்கான உணவகம் ஒன்றுக்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் உதவியளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையில் திங்களன்று இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பயனாளிக் கடும்பம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர் அணியினர் மத்தியில் மேலும் உரையாற்றிய வியாழேந்திரன், ஈழ விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் போராளிகள் உட்பட இந்த நாட்டின் சொத்துக்களான மனித வளங்கள் பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம்.
ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முள்ளி வாய்க்காலிலே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பு 11 ஆயிரத்து 900 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அங்கவீனமான முன்னாள் போராளிகள் விடயத்தில் அவர்களது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கு கடந்த அரசும் தற்போதைய நல்லாட்சி அரசும் எந்தத் திட்டங்களையும் முன் வைத்திருக்கவில்லை.
அதேவேளை நல்ல உள்ளம் கொண்ட பரோபகாரிகள் இந்த அநாதரவான முன்னாள் மாற்றுத் திறனாளிப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை ஆங்காங்கே தமது இயலுமைக்கேற்ப செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், அந்த உதவிகள் பரவலாக்கப்பட்டு தேவையுள்ள எல்லோரையும் அது சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றது.
ஆயுதப் போராட்டத்தில் வீட்டுக்கொருவர் என்ற வகையில் அந்தப் பங்களிப்பு இருந்திருக்கின்றது.
அந்த வகையில் இந்த மாவட்டத்திலே இருந்து போராட்டத்தில் பங்குகொண்டு பின்னர் இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு இயல்பு வாழ்;க்கைக்குத் திரும்பியவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கும் நாளாந்த ஜீவனோபாயத்திற்கும் மிகவும் சிரமப்படுகின்றாரக்ள்.
முறக்கொட்டான்சேனையில் சாந்தலிங்கம் காந்தரூபன் என்ற முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு கடந்த வருடத்திலே நாங்கள் 4 ஆடுகள் கொடுத்தோம். அதனை அவர் நன்கு பராமரித்து பல்கிப் பெருக வைத்துள்ளார்.
அதனால் இப்பொழுது விடியல் சமூக அமைப்பின் உதவி கொண்டு உணவகமும் மற்றும் சமூக செயற்பாட்டு இளைஞர் அணிகள் மூலம் அவரது சகொதரிகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக பைசிக்கிளும் இன்னபிற உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனைக் கொண்டு குடும்பப் பொறுப்பை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும். கல்வி கற்கும் பெண் சகோதரிகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
தனக்கு கிடைக்கின்ற உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி அதனை மேலும் வளப்படுத்தி வேலை வழங்கும் ஒருவராக இந்த முன்னாள் போராளி மாறவேண்டும். அவ்வாறு வேலை வழங்கும்போது அதில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.”
கடந்த 3 தசாப்த கால யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் பல உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், அங்கவீனங்கள் என்று எல்லாமே அழிவுகள்தான் மிஞ்சி நிற்கின்றன.
முன்னாள் போராளிகளான புனர்வாழ்வு பெற்ற பெண்களின் நிலைமையும் மிக வேதனையானது விடுதலை செய்யப்பட்ட 11 ஆயிரத்து 900 பேரில் 3200 பெண் போராளிகள் உள்ளார்கள்.
இவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த அனைவரும் பாடுபட்டுழைக்க வேண்டும்” என்றார்.

0 Comments:
Post a Comment