களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் சனிக்கிழமை (08) இரவு வீடு புகுந்து திருடர்களால் தங்கநகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் உள்ள திருமதி ராஜேந்தினி ஞானசேகரம் என்பவரின் வீட்டிலே இக்களவுச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பதினேழு கால் (17 ¼) பவுண் தங்கநகைகள், மூவாயிரம் ரூபா ரொக்கப்பணம் என்பவற்றை திருடர்கள் சூட்சுமமான முறையில் அபகரித்துச் சென்றுள்ளார்கள்.11 முக்கால் பவுண் (11 3/4) தாலிக்கொடி ஒன்றும்,ஒரு பவுண் அளவில் இரண்டு காப்புக்களும், மூன்றரை பவுண் மாலை ஒன்றும் உள்ளிட்ட 17 1/4 பவுண் நகைகளும்,3000 ரொக்கப்பணத்தினையும் அபகரித்துச்சென்றுள்ளார்கள். இச்சம்பவம் அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதுபற்றி வீட்டுரிமையாளர் திருமதி ராஜேந்தினி ஞானசேகரம் தெரிவிக்கையில்:- நானும் எனது இரண்டு பெண்பிள்ளைகளும் வீட்டில் வசித்துவருகின்றோம்.எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கின்றார். எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வெள்ளிக்கிழமை பெரியகல்லாறு மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடியை மீட்டெடுத்து வந்து வீட்டின் அறையில் உள்ள கட்டிலில் கீழ் வைத்துள்ளேன்.எனது மூத்தமகள் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கின்றார். மூத்தமகள் நள்ளிரவு வரையும் கண்விழித்துப்படித்துவிட்டு நித்திரைக்குச் சென்றுள்ளார்.
நாய் குரைச்சல் கேட்டது.வீட்டில் ஒளிர்ந்த மின்குமிழை அணைத்துவிட்டு தூங்கியுள்ளார். விடிகாலை 5.45 மணியளவில் நித்திரையில் எழுந்து வீட்டைப்பார்த்தபோது வீட்டின் யன்னல் கழற்றப்பட்டுள்ளது.அதன்பிற்பாடு தான் நகைகளும், பணமும் திருடர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதை அறிந்துள்ளோம். திருடர்கள் மதிலுக்கு மேல் ஏறி வீட்டின் வளவுக்குள் நுழைந்துள்ளார்கள்.நகை இருக்கும் அறைக்குள் இருக்கும் யன்னலை திறந்துள்ளார்கள்.யன்னலில் இரும்பு பாதுகாப்புச்சட்டகம் பொருத்தப்பட்டுள்ளது.திருடர்கள் இரும்புச்சட்டகத்தை வெளியே கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்து நகைகளையும்,பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்கள்.இதேவேளை மேலும் சில நகைகள் அலுமாரிக்குள் இருந்துள்ளது.சுமார் ஐந்து பவுண் நகைகள் அலுமாரிக்குள் இருந்துள்ளது.தெய்வாதீனமாக இந்த நகைகளை திருடர்கள் எடுத்துச்செல்லவில்லை.அலுமாரியை திருடர்கள் திறந்து பார்க்கவில்லை.
இது சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் தலைமையிலான பொலீஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மட்டக்களப்பு மாவட்ட தடையவியல் பொலிசாரையும் வரவழைத்து விசாரணைகளையும்,விஷேட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் சந்தைப்பெறுமதி சுமார் பத்து இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.





0 Comments:
Post a Comment