நல்லாட்சியிலும் தீய விடயங்கள் தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான சதாசிவம் வியாழேந்திரன் ஆதங்கம் வெளியிட்டார்.
மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திலுள்ள சித்தாண்டி ராமகிருஷ்ண மிஷன் கனிஷ்ட வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (23.03.2017) இடம்பெற்ற கட்டிடத் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
சித்தாண்டிப் பகுதியிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாள் இது.
கல்வி ராஜாங்க அமைச்சிலே அமைச்சர் ராதாகிருஷ்ணன் இருப்பதால் எங்களுடைய சொந்த வீடு போல் சென்று அலுவல்களை முடிக்கக் கூடியதாக இருப்பது நமக்கு கிடைத்த ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன்.
இந்தப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் ஒரு உன்னத மாற்றம் காண கல்வி ராஜாங்க அமைச்சரின் உதவி ஒத்தாசைகள் சிறப்பாக இருக்கும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாம் பல தடைகள் சோதனைகளை கல்வி வளர்ச்சியிலே தாண்ட வேண்டியிருக்கின்றது.
இலங்கையின் முதல் ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றாக இது தெரிவு செய்யப்பட்டிருப்பதனை அமைச்சர் கூறியிருப்பது எமது கல்விக்கான முன்னெடுப்பாக வரவேற்கின்றோம்.
பல்வேறு மிகப் பெரிய அளவிலான பௌதீக வள ஆளணிப் பற்றாக் குறையோடு மட்டக்களப்பு கல்குடா வலயம் இயங்கி வருகின்றது.
ஆசிரியர்கள், உயர்தரம் படிக்கின்ற மாணவர்கள் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் போதியளவு தளவாடங்கள் இல்லை.
கல்குடா கல்வி வலயத்திலே 200 இற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்றது.
யுத்தம் அதன் பின் விளைவாக ஏற்பட்ட வறுமை உட்பட பல்வேறுபட்ட காரணிகள் இப்பகுதி மக்களின் கல்வி வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன.
10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற சித்தாhண்டிப் பகுதியிலே 70 சத வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள். 350 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 60 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இங்கே தமது வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்வி சுகாதார பொருளாதார ரீதியில் இந்தப் பகுதியை மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
நல்லாட்சியைக் கொண்டு வருவதில் வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மற்றும் இனவாதத்தையும் மதவாதத்தையும் விரும்பாத நல்லமனம் கொண்ட சிங்கள மக்களும் பாடுபட்டார்கள்.
நல்லாட்சியின் ஜனாதிபதி பதவியேற்றபோது இந்த நாட்டைப் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக ஜனாதிபதியின் போதையொழிப்பு அறிவிப்பை நாங்கள் எல்லோரும் வரவேற்றோம்.
ஆனால் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகி 5 மாதங்கள் கடந்த நிலையில் மட்டக்களப்பு வாழைச்சேனையிலே மாபெரும் மதுபான உற்பத்திச்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது நல்லாட்சியின் மீது இப்பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு கிழக்கு மலையகத்தை சீரழித்தில் மதுவுக்கு பெரும் பங்கு இருக்கின்றது.
20 மதுபான சாலைகள் இருக்க அனுமதிக்கப்பட வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்திலே தற்போது 53 மதுபானசாலைகள் இயங்குகின்றன.
இங்கு வாழும் எல்லோரும் இந்த மதுபான சாலைகளைத் தடை செய்வதற்கு முயற்சி மேற்கொண்ட போதும் அதிகாரத் தரப்பு அதனையும் மீறி அனுமதி வழங்கியிருக்கின்றது.
மீண்டும் போதையை உருவாக்குகின்ற இந்த நடவடிக்கையை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.
புதிய மதுபானசாலை உருவாக்கம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சுதந்திர ஊடகவியலாளர்கள் இருவர் வழிமிறிக்கப்பட்டு தாக்கப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றார்கள்.
இலங்கையில் 1985இல் இருந்து 2010ஆம் ஆண்டு வரை இதுவரை 35 தமிழ் ஊடகவியலாளர்கள், 5 சிங்களம் 3 முஸ்லிம் உட்பட 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலே 13 மஹிந்த கோலோச்சியபோது 26 நல்லாட்சியின் பின்பும் ஊடகவியலாளர்கள் கொலையும் அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் தொடர்கின்றது.
இதனை அனுமதிக்க முடியாது. வடக்கு கிழக்கிலே தமது வாழ்வாதார குடியிருப்புக்கான சொந்த நிலங்களைக் கேட்டு மக்கள் போராடுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே பொது மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் 20 இடங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
வாகரை, புணானை, புச்சாங்கேணி, தியாவட்டவான், கிரான், முறக்கொட்டான்சேனை, கொம்மாதுறை, மயிலம்பாவெளி, குருக்கள்மடம், ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, ஆயித்தியமலை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, பாலமுனை, பாலமீன்மடு, பெரியபோரதீவு தனியார் இட வாழ்விடக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
முறக்கொட்டான்சேனை பாடசாலைப் காணியை இன்னமும் படையினர் தம்வசம் கையகப்படுத்திஜ வைத்துள்ளார்கள்.
இது பற்றி பலதடவை நாடாளுமன்றத்திலும் பேசினோம் வெளியிலும் பேசினோம். தீர்வு இல்லை. இதற்கு கல்வி ராஜாங்க அமைச்சர் தீர்வு கண்டு தர வேண்டும்.
எழுத்து மூலமாக சில கோரிக்கைகளையும் விடுக்க விரும்புகின்றேன்.” என்றார்.
0 Comments:
Post a Comment