டெங்கு நோய் என்பது மனிதர்களின் கரிசனையற்ற தன்மையால்தான் ஏற்படுகின்றது என செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.
டெங்கு நோயினை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்திட்டங்களை ஆராயும் கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூரில் வியாழக்கிழமை இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
செயற்பாட்டாளர்கள் மத்தியில் டெங்கு ஒழிப்புப் பற்றி தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டம் வெற்றியளித்துள்ளது.
இது நாட்டுக்கே முன்மாதிரியாகக் கொள்ளப்படக் கூடியதாகும்.
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாக நாம் கரிசனையின்றி கண்ட கண்ட இடங்களில் வீசும் வெற்றுக் கொள்கலன்கள், பிளாஸ்ரிக் போத்தல்கள் காணப்படுகின்றன.
இந்த வெற்றுக் கொள்கலன்கள் சூழலுக்கு எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன, ஆட்கொல்லி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளன என்பது பற்றி மைலம்பாவெளியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஆழமாக விழிப்புணர்வூட்டினோம்.
அதன் பயனாக அந்த மாணவர்கள் தமது சுற்றுப்புறச் சூழலிலே காணப்பட்ட சுமார் 14 ஆயிரம் வெற்றுக் கொள்கலன்களை ஒரு நாளில் அகற்றியிருந்தார்கள்.
இது இந்தப் பிரதேசத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே முன்னுதாரணமாகும்.
ஒரு கொள்கலனிலிருந்து மில்லியன் கணக்கான நுளம்புகள் பெருகக் கூடிய அபாயம் இருக்கின்றது.
மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல்பற்றிய விழிப்புணர்வையூட்டி அவர்களைச் செயலூக்கம் பெறவைக்கும் இவ்வாறான செயற்திட்டங்களை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள 4 பாடசாலைகளில் அமுல்படுத்தியிருந்தோம் அது வெற்றியளித்தது. ஒரு மாத கால இந்த செயற் திட்டத்தின்போது மொத்தமாக 27 ஆயிரம் வெற்றுக் கொள்கலன்களை மாணவர்களைக் கொண்டு சேகரித்து அகற்றியிருக்கின்றோம்.
இதுபோன்ற செயற்திட்டங்களை மாணவர்களுக்கு ஊடாக அமுல்படுத்தும்போது எதிர்காலத் தலைவர்களான மாணவர்களும் சமகாலத்தில் அவர்களது பெற்றோர் மற்றும் நண்பர்களும் டெங்கு நோய் பற்றியும் சூழல் சுற்றாடலைத் தூய்மை குன்றாது பேண வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து அதன்படி செயற்படத் தொடங்குவர்.
தொடர்ச்சியான செயற்திட்டங்கள் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
உதாசீனப் படுத்தினால் எல்லோரும் பாதிக்கப்பட நேரிடும்.
டெங்கு நோய் என்பது மனிதர்களின் கரிசனையற்ற தன்மையால்தான் ஏற்படுகின்றது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நோய் உற்பத்தியாவதற்குத் தோதாக பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட 60 பேர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment