முதுகெலும்பிருந்தால் எந்த விசாரணைக்கும் பயந்தோட வேண்டியதில்லை என்று ஜனாபதிக்குத் தான் அறைகூவல் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. மாணிக்கவாசகத்தின் 41வது மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் 28வது நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 12.03.2017 செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சருமான கே. துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வதேச நடப்புக்கள், ஜெனீவாத் தீர்மானம் மற்றும் சமகால முன்னெடுப்புக்கள் நகர்வுகள் பற்றி தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன்@
இலங்கை ஜனாதிபதிக்கும் ஒரு செய்தியை அழுத்தம் திருத்தமாக நான் இந்தப் பேருரையிலே சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
சமீபத்தில் பலாலியிலே ஜனாதிபதியவர்கள் படையினருக்கு மத்தியிலே பேசும்போது எனக்கு முதுகெலும்பு இருக்கிறது நான் எந்த இராணுவ வீரனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்க விடமாட்டேன் என்று சொல்லியிருக்கின்றார்.
இது முதுகெலும்பு இருக்கிற ஒருவர் சொபல்லுகின்ற செய்தி அல்ல.
எந்த விசாரணையையும் நாங்கள் சந்திக்கத் தயார் என்று சொல்லுகின்ற ஒருவருக்குத்தான் முதுகெலும்பு இருக்கிறதென்று அர்த்தம்.
விசாரணைக்குப் பயந்து ஓடுகின்ற ஒருத்தர் முதுகெலும்பு இருப்தாக பேச தகுதியில்லை.
ஜெனீவாத் தீர்மானத்திலே உள்ள அத்தனை வாசகங்களையும் கடைப்பிடித் தொழுகுவதற்கு நாங்கள் செயலாற்றுவோம்.
இந்தப் போராட்டத்திலே எங்களைச் சேர்ந்தவர்களே படகைக் கவிழ்ப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.
ஏனென்றால் இது எங்களுடைய மக்களின் நன்மையின்பாற்பட்டது.
எங்கேயோ விழுந்து கிடந்த எங்களுடைய இனத்தை ஜெனீவாத் தீர்மானம் இப்பொழுது இலங்கை அரசாங்கத்தோடு சமமாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
இதிலிருந்து யார் பெறுப்போடு முன்னேறுகிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
18 மாதம் கடந்தும் இலங்கை அரசாங்கம் ஏதோ ஒன்றிரண்டைத் தொட்டு விட்டு இப்பொழுது கீழே போய் விட்டிருக்கின்றது.
அரசியலமைப்பு உருவாக்கத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருப்படியாகத்தான் செயற்படுகிறது.
இன்னும் அப்படியே செயற்பட்டு நாம் எமது சமூகத்தி;ற்கு விடிவை எடுத்துக் கொடுப்போம்.
கத்தியைக் காட்டி உன்னை சுடப்போகின்றேன் என்று மிரட்டும் கேலி நிலைக்கு நாம் அறிவிழந்து செயற்பட்டு விடக்கூடாது.
இலங்கை அரசின் தோள்களிலும் பாரிய சுமையைச் சுமத்தியிருக்கின்றோம் இதுவும் ஒரு பாரிய வெற்றி என்றே கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாங்கள் நியாயமாக விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டுள்ளோம் என்பதை சர்வதேச சமூகம் நம்புகின்றது. நாங்கள் தீர்வு விடயத்திலே விலகி ஓடவில்லை.
இதுதான் வெற்றி. நாம் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளாமல் விட்டிருந்தால் எல்லாப் பழிகளும் எங்கள் மீது சுமத்துப்பட்டு விடும்.
அரசாங்கம் எங்கள் மீது சுட்டு விரலை நீட்டி இவர்கள்தான் இனப்பிரச்சினைத் தீர்வைக் குழப்பியடித்தார்கள் என்று சொல்லாதளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை நாம் உருவாக்கி விட வேண்டும். அது முழுமையாக நடக்க வேண்டும்.
இரண்டு வருட காலத்திற்குள்ளேயே அவர்கள் எதையாவது செய்தாக வேண்டும்.
நாம் எழுவதாக நினைப்பது அவர்களை எழப்பண்ணுவதற்குத் தோதாக அமைந்து விடக் கூடாது.
இந்தப் பொறுப்பு அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுவதைத் தடுத்து அரசாங்கத்தின் மீது பழி விழாமல் இருப்பதற்குத் தோதாக பலர் நடந்து கொள்கின்றார்கள். போகிற போக்கு அப்படித்தான் இருக்கிறது.
இந்த முன்னறிவு எச்சரிக்கை நாம் சொன்னால் தமிழ் சமூகத் துரோகிகள் என்று எம்மை முத்திரை குத்துகிறார்கள்.
அவர்கள் எழாமல் நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நமது எழுகை அவர்களை எழப்பண்ணி விடக் கூடாது.
கசப்பாக இருந்தாலும் பொறுப்பாக செயற்பட வேண்டும்.
மக்களுக்கு விடயங்களை விளக்குகின்ற பொறுப்பையும் நாம் செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக எங்கள் மத்தியிலேயே தவறு என்று கூறுமளவுக்கு நாம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது, மக்கள் சுயமாக நீதி கேட்டு வீதிக்கு வருவதை நாங்கள் மறுக்க வில்லை. ஆனால் இதனை திசை திருப்பி விட பலர் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்படி நடந்தும் இருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது.
நம்மவர்களில் எவராவது சரியாக மக்களை வழி காட்டத் தவறுவார்களாக இருந்தால் அவர்கள் தான் மிக மோசமான சமூகத் துரோகிகளாக இருப்பார்கள். அது கறைபடிந்த அத்தியாயமாக இந்த சமூகத்திற்கு வந்து விடும்.”
0 Comments:
Post a Comment