7 Mar 2017

ஒதுக்குப்புறக் கிராமங்களை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்கள் முன்வரவேண்டும் மக்கள் சந்திப்பில் வியாழேந்திரன் அறைகூவல்

SHARE
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமை நிலையில் உள்ள தமிழ் மக்கள் வாழும் எல்லைப்புறக் கிராமங்களை தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் திட்டங்களை ஆரம்பிக்கும்படி புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்களிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

“வீதியிலும்”  ஒருநாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - வவூணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்சேனை கிராம மக்களை வியாழேந்திரன் திங்கட்கிழமை 06.03.2017  நேரில் சென்று சந்தித்தார்.

மக்களது நிறை குறைகளைக் கேட்டறிந்து கொண்ட அவர், கிராமத்தில் உள்ள குளங்கள், பாதிப்படைந்து காணப்படும் வீதிகள், யுத்தத்தினால் பாதிப்படைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள், தூர்ந்து போய்க் கிடக்கும் விளையாட்டு மைதானம், வைத்திய சிகிச்சை நிலையம் போன்றவற்றை பார்வையிட்டார்.
அத்துடன் கிராமத்தின் விவசாய அமைப்பு, விளையாட்டுக் கழகம், ஆலய நிருவாகத்தினர், இளைஞர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி தொடர்பாகவும், தமிழ் மக்கள் வாழும் எல்லைப்புற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடினார். 

மக்கள் மத்தியில் உரையாற்றிய வியாழேந்திரன், கிராம வீதியில் ஒருநாள் செயற்திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு நான் நேரடியாகச் சென்று அக்கிராமத்தில் உள்ள மக்களுடன் கலந்துரையாடி என்னால் முடிந்த அளவிற்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

நாடாளுமன்ற  தேர்தல் பிரச்சாரத்தின்போது  இந்தப்பகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு வருகை தராத போதிலும் கிராமத்தில் ஒருநாள் என்ற செயற்திட்டத்தின் ஊடாக உங்களது கிராமத்திற்கு நேரடியாக விஜயம் செய்து உங்களுடன் கலந்துரையாடி இக்கிராமத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு என்னால் இயலுமான முயற்சிகளை எடுப்பேன்.

கிராமத்தின் தேவைப்பாடுகளை அரசாங்கத்தின் மூலமாகவோ, எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாகவோ, புலம்பெயர் வாழ் தமிழ்  அமைப்புக்களின் நிதியுதவியினாலோ பூர்த்தி செய்து தருவேன்.
சமீபத்தில் நான் கனடா சென்றிருந்த போது அங்குள்ள புலம்பெயர் அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்தற்கமைய தற்போது புலையவெளி, பாவற்கொடிச்சேனைக் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அது போன்று பன்சேனை கிராமத்தினையும் அபிவிருத்தி செய்யும்படி புலம்பெயர் வாழ் தமிழ்  அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்  அவர்களது உதவி கொண்டு வெகு விரைவில் பன்சேனை கிராமத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும்”என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: