அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனத்தைப் பெற்றபின் நகரப்புறங்களை நாடிச் செல்லும் போக்கை அங்கீகரிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலுள்ள ஈரலக்குளம் - பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் திங்களன்று 27.03.2017 இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@ மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயம் பல்வேறு பெரிய அளவிலான பௌதீக வள ஆளணிப் பற்றாக் குறையோடு இயங்கி வருகின்றது.
ஆசிரியர்கள், உயர்தரம் படிக்கின்ற மாணவர்கள் கற்பிப்பதற்கும் கற்பதற்குமாக போதியளவு தளவாடங்கள் இல்லை.
கல்குடா கல்வி வலயத்திலே 200 இற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்றன.
யுத்தம் அதன் பின் விளைவாக ஏற்பட்ட வறுமை உட்பட பல்வேறுபட்ட காரணிகள் இப்பகுதி மக்களின் கல்வி வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன.
கல்குடா வலயத்திலுள்ள 20 சத வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளாக இருந்து வருகின்றன.
இதனை இப்படியே தொடர்ந்தும் விட்டு வைக்க முடியாது.
புதிதாக இப்பகுதிப் பாடசாலைகளுக்கு நியமனம் பெறும் ஆசிரிய ஆசிரியைகள், அதிபர்கள் தங்களைத் தியாகம் செய்து அர்ப்பணிப்போடு பணியாற்றினால் கல்வியில் பின்தங்கிய பகுதிகளை மீட்டெடுக்கும் சவாலை இலகுவில் வெற்றி கொள்ளலாம்.
ஒதுக்குப்புறக் கிராமங்களிலுள்ள வறுமையான மாணவர்களுக்கு கல்வியறிவையூட்டி சேவை செய்யக் கிடைப்பதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி பணியாற்றினால் கடவுளின் அனுக்கிரகமும் எங்களுக்கு இருக்கும்.
கல்வியில் முன்னேற்றமடையும் முக்கிய தேவை கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு இருக்கிறது.
இந்த விடயத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வி அதிகாரிகளோடு மட்டும் இந்தப் பொறுப்பைச் சுமத்தி விடாமல் கிராம அமைப்புக்கள், பெற்றோர், புலம் பெயர்ந்து வாழும் நமது நல்ல மனம் படைத்தோர் முன்வந்து உதவ வேண்டும்.
அதேவேளை யுத்தத்தால் தமது சொந்தக் கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்கள் அந்தக் கிராமங்களை தொடர்ந்தும் பாழடைந்து செல்ல விடாமல் மீளக் குடியமர்வதில் அக்கறை காட்ட வேண்டும்.
தற்பொழுது மீளக் குடியேறியிருக்கும் மக்களோடு ஏனையோரும் மீளக்குடியமரும் பொழுதுதான் கிராமம் புதுப் பொலிவு பெறும். யுத்த வடுக்கள் மாறி கல்வி பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும்” என்றார்.

0 Comments:
Post a Comment