29 Mar 2017

ஆட்சிமாற்றத்தின் சூத்திரதாரி சம்பந்தன் என்பதை அகில உலகுமே அறியும் மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்

SHARE
வெள்ளளைவேன் பீதி, துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு, உயிரிழப்பு, ஆட் கடத்தல், இராணுவக் கெடுபிடி, கப்பம் இல்லாதது என பெரும் நிம்மதியான சூழலில் மக்கள் வாழ்வதற்கான ஆட்சி மாற்றத்தின் சூத்திரதாரி சம்பந்தன் என்பதை அகில உலகுமே அறியும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.


திங்கட்கிழமை 27.03.2017 சித்தாண்டி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள  நிலைமை எவ்வாறு வந்தது நாங்கள் வாக்குப் போட்டோம் அதனால் மைத்திரிபால சிறிசேன வந்துவிட்டார் என்று சிலர் சொல்லுகின்றார்கள்.
அவ்வாறு அல்ல. மைத்திரிபால சிறிசேன எவ்வாறு களத்திற்கு வந்தர் என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த நாட்டில் மிகப் பெரியதொரு திட்டத்துடன் முன்பிருந்த ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டை தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தொடர்ச்சியாக ஆளக்கூடிய விதத்திலே மிக இறுக்கமான, நுணுக்கமான பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார். 
ஆனால் அந்தத் திட்டங்களையெல்லாம் முறியடிக்கக் கூடிய விதத்திலே ஒரு பொதுவான வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வர வேண்டும் என்கின்ற விடயத்தில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும், தென்தரப்புத் தலவர்களும் வெல்லக் கூடிய ஒருவரை வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிக மிக நுணுக்கமாக வேலை செய்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களை வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் முன்மொழிந்த போது அவரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று எமது தலைவர் மிக மிக உறுதியாகச் சொன்னார்.

அனைவரும் மிகவும் நிதானமாக யோசிக்க வேண்டிய விடயம் இது.
மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராகக் கொண்டு வருவதற்கு மிகமிக நுணுக்கமாக ஆராய்ந்தவர் எமது தலைவர் என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லுவோம்.

எமது தலைவரின் அப்போதைய தீர்மானத்தின் பிரகாரம் எத்தகைய மாற்றம் வந்திருக்கின்றது என்பதைப் பாருங்கள். எனவே மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக கொண்டு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜெனீவாவிலே இடம்பெற்ற விடயங்கள் பற்றி பார்த்தால் முதலில் சொன்னார்கள் அரசாங்கங்களுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வர மாட்டார்கள் என்று ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொடுவருவதில் முழுச் சூத்திரதாரியாக இருந்தவர் எமது தலைவர் சம்பந்தன் ஐயாதான்.

அவரின் இராஜதந்திர வெற்றிதான் அங்கு திர்மானங்களாக வந்தன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் எல்லாம் வந்ததன் பிறகு எங்களோடு இருந்த சிலர் அங்கு சென்று சில சில அறைகளில் இருந்து விட்டு பத்திரிகையாளர் மாநாடுகளை மேற்கொண்டு விட்டு ஏதோ மண்ணைக் கயிறாகத் திரிப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அடிப்படையெல்லாம் மறந்து விட்டு இந்த விடயம் பற்றி இந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் யார் என்பதைப் பற்றி சற்றுமே சிந்திக்காதவர்களாக இன்று சுமந்திரனையும், சம்பந்தன் ஐயாவையும் வெளியே தூக்கிப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் மிக நிதானமாக நம்முடைய தலைவர் யார் என்பதை கவனமாக ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நிலைமையை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு வெற்றியையும், மீட்சியைப் பெற்றுத் தர விருப்பம் கொண்டுள்ளவரும் எமது தலைவர்தான். எனவே அவருக்கு கைகொடுக்கக் கூடிய விதத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா அங்கத்தவர்களும் உழைத்திட வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: