தற்கால பழக்கவழக்கங்களின் விளைவுகளால் தொற்றா நோய்களின் உறைவிடமாக மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கின்றார்கள் என ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (07.02.2017) வெளியோயாளர் பிரிவில் இடம்பெற்ற தொற்றா நோய்கள் பற்றிய விழிப்பூட்டலில் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்@ தொற்றா நோய்களின் அதிகரிப்பு என்பது தற்போது கவலை தரும் விதத்தில் கூடிச் செல்கின்றது.
இயந்திர மயமான வாழ்க்கை முறையில் நமது பழக்கவழக்கங்களும் மாறி விட்டிருக்கின்றன..
உடனடி உணவுகள், சொகுசு சேவைகள், விரைவுப் பயன்கள் என்பனவற்றுக்காக நாம் நம்மை மாற்றிக் கொண்டுள்ளோம்.
இதன் காரணமாக நாம் சுக தேகிகளாக இல்லை. ஒரு சிறிய நோயைக் கூட தாக்குப் பிடிக்கக் கூடிய அளவில் இல்லாது நமது தேகாரோக்கியம் கெட்டு விட்டது.
உயரத்திற்கேற்ற, வயதிற்கேற்ற நிறையில்லை, தோற்றமில்லை இப்படிப் பல ஆரோக்கியமற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நமது மூதாதையர்களைப் பீடிக்காத தொற்றாத நோய்கள் நம்மை ஆட்கொண்டு விட்டன.
இருத நோய்கள், நீரிழிவு, உயர் குருதியமுக்கம், புற்றுநோய்கள் உட்பட பல்வேறு விதமான தொற்றா நோய்களின் அதிகரிப்பு கவலையளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது.
அதிவேக பயணத்தின் போது விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பும், காயங்களும் கூட அச்சந் தரக் கூடியளவுக்கு அதிகரித்துள்ளது.
முன்னொரு காலத்தில் தொற்று நோய்களுக்கே நாம் பயப்பட வேண்டியிருந்தது. இப்பொழுது அந்த நிலைமாறி தொற்றாத நோய்களின் உறைவிடமாக மனிதர்கள் மாறி விட்டார்கள்.
இயற்கை வாழ்க்கை முறையைப் புறந்தள்ளிய செயற்கையான நடவடிக்கைகள் நமது அன்றாடப் பழக்க வழக்கங்களில் அதிக தாக்கம் செலுத்தி விட்டதனால் இந்த நமது முன்னோர்கள் அனுபவித்திராத புதிய நோய்களுக்கு நாம் முகங்கொடுக்கின்றோம்.
இதனாலேயே தொற்றாத் தன்மை வாய்ந்த நோய்கள் பற்றியும் உடலாரோக்கியத்தைப் பேணி;ப் பாதுகாப்பது பற்றியும் பரந்தளவிலான விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. இதனை ஒரு சமூகக் கடமையாகக் கருதி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி எல்லோரும் மீளத் திரும்ப வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் வைத்தியர் ஏ.எஸ். சுல்பிகா தேகாரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி நோயாளர்களுக்கு விழிப்பூட்டலைச் செய்தார்.
அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment