6 Feb 2017

தொலைதூரக் கிராம மக்களுக்காக சகல பொலிஸ் நிலையங்களிலும் நடமாடும் வைத்திய சேவைக்கு ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜாகொட ஆராச்சி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல தொலைதூரக் கிராம மக்களின் சௌக்கிய நலனைக் கருத்திற் கொண்டு அந்தந்தக் கிராமங்களுக்குப் பொறுப்பான சகல பொலிஸ் நிலையங்களிலும் நடமாடும் வைத்திய சேவைக்கு ஏற்பாடு செய்யுமாறு தான் பணித்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜே. ஜாகொட ஆராச்சி திங்களன்று (06.02.2017) தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாகக் கேட்டபோது மேலும் கூறிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகரப் பகுதிகளை விட தொலைதூரக் கிராம மக்களுக்கு வைத்திய வசதிகள் அவசியமாகத் தேiவைப்படுவதை நான் அங்கு நேரில் சென்று அவதானித்துள்ளேன்.

நான் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் (டிஐஜி) என்கின்ற வகையில் எனது முதற் கடமையாக நான் செய்தது இங்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொலைதூரக் கிராமங்களில் வாழும் மக்களின் கஷ்ட நஷ்டங்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் நோட்டமிட்டதுதான்.
அதன் பயனாக ஒதுக்குப் புறக் கிராமங்களில் வாழும் தொலைதூரக் கிராம மக்கள் நகரப் பகுதிகளுக்கு வந்து வைத்திய வசதிகளைப் பெற்றுச் செல்வதாயின் போக்குவரத்து, பொருளாதாரம், களைப்பு உட்பட பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை அறிந்து வைத்துள்ளேன்.

பல்வேறுபட்ட நோய்களின் தாக்கங்களுக்கு அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள்.
அதனால், அந்தந்தக் கிராமங்களை உள்ளடக்கும் பொலிஸ் நிலையங்களை, கிராம மக்களின் சௌக்கிய நலன் கருதி வைத்திய முகாம்களை நடாத்துமாறு நான் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கின்றேன்.

இலங்கையர்கள் எல்லோருமே ஒரு தாய் மக்கள்தான். அவர்களில் ஒரு சிலர் வைத்திய வசதிகள் கிடைக்கப் பெறாமல் அல்லது அரிதாகக் கிடைக்கும் வைத்திய வசதிகளைப் பெற்றுக் கொண்டு நோய்வாய்ப்பட்டவர்களாக வாழ நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உடல் நலமும் உள்ளத்து நலமும் சிறப்பாக இருந்தால்தான் சமாதானமான மக்களாக வாழ முடியும்.

அதனால் இந்த இலவச வைத்திய முகாம்கள் தொலை தூரக் கிராம மக்களுக்கு மிகவும் முக்கியம் எனக் கருதி அவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு சகல தொலைதூரக் கிராமங்களையும் நிருவகிக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் பணித்துள்ளேன்.
 

SHARE

Author: verified_user

0 Comments: