கிழக்கு மாகாண சபையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அபிவிருத்தி சட்டமூலத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். அல்லது எதிர்க்கட்சியின் பக்கம் அமரவும் தயங்க மாட்டோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை(வெள்ளிமலை) தெரிவித்தார். கடந்த 05.02.2017ம் திகதி திருப்பழுகாமத்தில் இடம்பெற்ற இந்து கலா மன்றத்தின் பொங்கல் விழா
நிகழ்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.,
இந்த நல்லாட்சி அரசாங்கமானது நல்லாட்சியாக இருக்குமா? இல்லையா? என்பதை நாளடைவில் தான் பார்க்க வேண்டும். வட கிழக்குமாகாணங்களில் தமிழர்களுக்கு உரிமை வேண்டும். நாங்கள் உரிமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். தமிழராகிய நாங்கள் இந்த நாட்டை ஆண்ட பரம்பரையினர் மாறாக யாராலும் ஆளப்பட்டவர்கள் அல்ல. அநுராதபுரம், பொலனறுவை, கண்டியஇராச்சியம், மற்றும் வடகிழக்கையும் ஆண்டோம். காலி முகத்திடல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம்.
அயல்நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், அன்றைய இலங்கை நாட்டின் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் இணைந்தே வடக்கு கிழக்கு மாநிலங்களை இணைத்து கொடுத்தார்கள். அதற்கு இருந்த அதிகாரங்களை திவிநெகும சட்டம் கொண்டு பறித்தெடுத்தார்கள். தற்போது அபிவிருத்தி சட்டத்தினை கொண்டுவந்து இருக்கின்ற அதிகாரங்களை பறித்தெடுக்க இந்த நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது. இதற்கு எந்த தமிழனும் உறுதுணையாக இருக்கமாட்டான். கிழக்கு மாகாண சபையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அபிவிருத்தி சட்டமூலத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். அல்லது எதிர்க்கட்சியின் பக்கம் அமரவும் தயங்க மாட்டோம் என்பதை இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்தியதில் சிறுபாண்மை இனத்தவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. அதிலும் வடக்கு கிழக்கு தமிழர்கள் என்பதை மறுக்க முடியாது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் வடகிழக்கிலே தமிழன் தன்னைதானே ஆட்சி புரிவதற்கு தடையாக இருந்தால் நாங்கள் எதையும் செய்ய தயங்கமாட்டோம் என்பதையும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment