மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் கடந்த 30 வருடகால யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களை புறக்கணித்து விட்டது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அதிருப்தி தெரிவித்தார்.
எழுக தமிழ் நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் என்னை மேடையில் ஏறி பேசுமாறு வலியுறுத்தினர். ஆனால் அழைக்காமல் மேடையேறுவது அகௌரவம் என்பதை அந்தப் பெண்களுக்குச் சொல்லி வைத்தேன். ஒட்டுமொத்தத்தில் கிழக்கு எழுக தமிழ் பெண்களைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டது எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு குறித்த அதிருப்தியை வெளியிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இது தொடர்பாக ஞாயிறன்று (12.02.2017) மேலும் கூறியதாவது,
யாழ் எழுக நிகழ்வுகளில் கூட தீர்வுத் திட்டம் குறித்துப் பிரஸ்தாபிக்கும்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் பெறப்படவில்லை.
மாற்றுக் கருத்துக் கொண்ட மக்கள் பேரியக்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ் மக்கள் பேரவையும் எழுக தமிழும் தன்னுடைய பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
எழுக தமிழின் பிரகடனத்தில் காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் என்று தமிழ் மக்களின் பல விவகாரங்கள் கூறப்பட்டிருந்ததால் அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் நானும் சக மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் சிவநேசன் மற்றும் 35 பெண்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து எனது சொந்தச் செலவில் வந்து கலந்து கொண்டேன்.
ஆனால் எழுக தமிழ் நிகழ்வில் பேசியவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள். அங்கொரு மேல்வர்க்க சிந்தனையின் குரலாகவே பேசியவர்கள் எல்லோரும் காணப்பட்டார்கள்.
ஏற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் சிலரை செலவழித்து அழைத்து வந்திருந்தனர். முதலமைச்சரும் இரு வாகனங்களில் வந்திருந்தார். நாம் வருவது தெரிந்தும் யாரும் கேட்டதுமில்லை. ஏறெடுத்தும் பார்க்கவுவில்லை.
இருந்தும் எமது தமிழினத்திற்காக காணாமல் போனோரின் சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெண்களின் குரலும் அங்கு ஒலிக்கவேண்டும் என்பதற்காக ஏற்பாட்டாளர்களிடம் உதவிகேட்டும் அவர்கள் இணங்காத காரணத்தினால் எனது சொந்தச் செலவில் 35 பெண்களை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்திருந்தேன்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரேயொரு பெண் மாகாணசபை உறுப்பினர் நானொருவள்தான். அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உணர்வோடு கலந்து கொண்டவள். எனக்கு மேடையில் அமரவோ பேசவோ சந்தர்ப்பம் தரவில்லை. அதற்கு எனக்கு ஆசையுமில்லை விருப்பமுமில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்காவது ஒரு சந்தர்ப்பம் வழங்கியிருக்கவேண்டும்.
இந்நிலையில் தமிழ்ப்பேரவையில் பெண்ணுரிமை பெண்களுக்கான சமவாய்ப்பு பற்றி எப்படி கதைப்பது? பெண்களுக்கு இடமில்லாத அப்பேரவையில் எதிர்காலம் எவ்வாறிருக்கும்.
என்னுடைய தனிப்பட்ட செலவில்தான்தான் நான் எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக வடக்கிலிருந்து ஒரு பஸ் வாடகைக்கு அமர்த்தி ஆதரவாளர்களை அழைத்துச் சென்றேன்.
மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் ஒரு பெண் இருந்தார் ஆனாலும், அவருக்குக் கூட கருத்துக் கூற ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை.
இது ஒரு மேல் வர்க்க நிலைப்பாட்டின் வெளிப்பாடு என்றுதான் நினைக்கின்றேன்.
பெண்கள் எத்தனையோ விதமாக கடந்த கால யுத்த வலிகளைச் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அடிமட்டப் பெண் அனுபவிக்கும் துயரங்களை நானும் கடந்து வநற்தவள் என்பது எனக்கு அனுபவ ரீதியாகத் தெரியும்.
முதலமைச்சராக இருந்தாலும் சம்பந்தன் ஐயாவாக இருந்தாலும் நான் நேருக்கு நேர் உண்மையைச் சொல்லி விடுபவள்.
ஆதலினால்தான் இப்பொழுதும் மட்டக்களப்பு எழுக தமிழ் குறித்த என் விமர்சனத்தை முன் வைக்கின்றேன்.
நமது சமூகத்தில் 60 வீதம் பெண்கள் உள்ளார்கள். அவர்கள் கடந்த கால யுத்தப் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்கள். ஆகவே, அந்தப் பெண்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்குள்ள தடைகளை நீக்க வேண்டும்.
தவறான எண்ணப்பாங்குகளை மாற்ற வேண்டும்.
பெண்கள் தங்களது பாதிப்புக்களை வெளிக் கொண்டு வருவதற்கு தயங்கும் இடங்களாக நீதி மன்றங்கள் தொடக்கம் நிருவாக அலுவலகங்கள் என்று பல இடங்களுண்டு.
எழுக தமிழ் தமிழ்த் தேசியத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர முயன்றால் அதில் பெண்களின் பாத்தரப் பங்கை மறக்கவோ மறுதலிக்க முடியாது.
அதற்கு அதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு சார்ந்து பெண்கள் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் நிதி சேகரி;க்கின்ற அமைப்புக்கள் தங்கள் சொகுசுக்காக அவற்றை மேற்கொள்ளாது பாதிக்கப்பட்டு துயரத்தோடு நாளாந்த வாழ்க்கையில் துவண்டு கொள்ளும் பெண்களுக்காக செயற்பட வேண்டும்.
நலிவடைந்த பெண்களை வளர்ப்பதற்கான அமைப்புக்கள் தேவை.
தலைமைத்துவத்திற்காக நான் குரல் கொடுக்கவில்லை. எனக்கு அது பேராவலும் இல்லை.
0 Comments:
Post a Comment