13 Feb 2017

அரசியில் வாதிகளுக்குள் முரண்பாடு என்று கூறிக்கொண்டு அதிகாரிகள் சாக்குப் போக்குக் காட்டுகிறார்கள். அலிஸாஹிர் மௌலானா அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காட்டம்

SHARE
அரசியில்வாதிகளுக்குள் முரண்பாடு என்று கூறிக்கொண்டு அதிகாரிகள் சாக்குப் போக்குக் காட்டி விடுகிறார்கள் என ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்
தலைவருமான அலிஸாஹிர் மௌலானா காட்டமாகத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை (13.02.2017) ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 2017ஆம் ஆண்டில் அமுலாக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் பற்றி ஆராயப்பட்டபொழுது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அலிஸாஹிர் மௌலானா@ வழமையாக அரசியல்வாதிகளுக்குள் பிரச்சினைகள் இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஒவ்வொரு திணைக்களங்களிலுமுள்ள அதிகாரிகளும் அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்த்து தமது கடமையைச் செய்வதையும் நிறுத்தி விடுகின்றார்கள். இது நல்ல போக்கல்ல.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஏக காலத்தில் பல பிரதேச செயலகங்களில் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

அவ்வாறு இடம்பெற்றால் ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லாக் கூட்டங்களிலும் பிரசன்னமாக முடியாது போய் விடும்.

இது விடயமாக நிகழ்ச்சி நிரல் திட்டமிடும்பொழுது ஏக காலத்தில் கூட்டங்களுக்கான திகதி தீர்மானிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட செயலாளரைக் கேட்டுக் கொள்ள இருக்கின்றோம்.

காலை வேளையில் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் கூட்டம் நடாத்தினால் அடுத்த பிரதேச செயலகத்திற்கான கூட்டம் பிற்பகலில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட முடியும்.

அரசியல்வாதிகளுக்கு அதிக வேலைப்பளுக்கள் உண்டு.
2016 இல் ஆரம்பித்த வேலைகளும் தொடருகின்ற அதேவேளை 2017ஆம் ஆண்டு அதிக அபிவிருத்திகளின் காலகட்டமாக இருக்கும்.
எனவே, இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்கு அதிகாரிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தங்களுக்குள் கலந்தாலோசித்து அபிவிருத்திகளைச் செய்வதுதான் நிலையான அபிவிருத்திக்கு ஆதாரமாக இருக்கும்.

ஏறாவூர் நகர பிரதான நெடுஞ்சாலை அகலமாக்கும் பணிகள் அடுத்த திங்களன்று (20.02.2017) ஆரம்பிக்கும்.
இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கென 888 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வேலைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாக ஏறாவூர் நகர நெடுஞ்சாலை அகலமாக்கும் வேலைத் திட்டத்தில் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், உள்ளுராட்சி நிருவாகம், அதிகாரிகள் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் என எல்லோரும் இணைந்து ஏறாவூரை அழகான அபிவிருத்தி நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஏறாவூரில் யுத்த அடையாளங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்க நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இதிலே வெற்றி காண்பதற்கு எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும்.”

SHARE

Author: verified_user

0 Comments: