5 Feb 2017

இந்த நாட்டிலே விட்டுக் கொடுப்புடன் வாழ முடியாவிட்டால் 30 வருட துன்பம் தொடரும். கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரோ

SHARE
இந்த நாட்டிலே வாழும் எல்லோரும் பெரும்பான்மை சிறுபான்மை என்று சிந்திக்காமல் சகலரும் சமத்துவமானவர்கள் என்று கருதி விட்டுக் கொடுப்புடன் வாழ முடியாவிட்டால் துன்பம்
தொடரும் என கல்முனை ஸ்ரீ சுபத்திராம மகா விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரோ தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளந்தண்டு வலி, பார்வைக் குறைபாடு உட்பட மற்றுமுள்ள நோய்களுக்கான இலவச சிகிச்சை முகாமும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும்; ஞாயிறன்று மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இடம்பெற்றபோது அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
தொடர்ந்து அங்கு தமிழில் சிறப்பாக உரையாற்றிய அவர், வழமையாக எந்தவொரு நிகழ்வுகளிலும் பௌத்த மதத் தலைவருக்குத்தான் முன்னுரிமையளித்து உரையாற்றச் சொல்வார்கள்.

ஆனால், வழமைக்கு மாறாக இந்த நிகழ்விலே பௌத்த சமயத் தலைவராகிய எனக்கு நாலாவது இடம் கிடைத்ததையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். அதை ஒரு பிரச்சினையாக நான் எடுக்கவில்லை.
மற்ற மதத் தலைவர்கள் தமது உரையிலே என்ன கூறுகின்றார்கள் என்று அவதானித்து விட்டு உரையாற்ற எனக்குக் கிடைத்த இந்த நாலாவது இடம் என்பது எனக்கு நல்ல வாய்ப்பை அளித்திருப்பதால் இதை ஒரு சந்தர்ப்பமாக நான் கருதுகின்றேன்.

நாங்கள் இந்த நாட்டிலே விட்டுக் கொடுப்புடன் வாழ வேண்டும். மற்றவருக்கு உதவ வேண்டும் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் நமது உன்னதமான அன்பை வெளிப்படுத்த வேண்டும். சிறுபான்மை பெரும்பான்மை என்று யாருமே சிந்திக்கக் கூடாது. ஒரு சிறந்த மனிதர்களாக நாம் மாறுவதோடு மற்றவர்களை அவ்வாறே மாற்ற வேண்டும்.

மற்றவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் கண்ணியத்தையும் வழங்க மறந்தால் கடந்த 30 வருடகால பகைமை உணர்வு இ;ன்னமும் நீடிக்கும்.
அதற்கு நாம் வாய்ப்பளித்துவிடக் கூடாது. மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா சமூக ஐக்கியத்திற்காகப் பாடுபடுவதால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

2004ஆம் ஆண்டு நான் கல்முனை விகாராதிபதியாக பொறுப்பெடுத்த பொழுது எனக்கு தமிழ் தெரியாது.

அங்கே தமிழ் பேசும் மக்கள் தங்களது பிரச்சினைகளைச் சொல்லும் போது அதிலே நான் உதவ வேண்டும் என்று என் மனம் ஏங்கியது. அதனால் முதலில் அவர்களது துயரங்களைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்காக நான் தமிழைக் கற்றேன்.

எனக்கு தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பாரக்க்க முடியாது. அரச அதிகாரிகள் கருணையுள்ளத்தோடு பணிபுரிய வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

நமது பண்பாடுகளை விழுமியங்களை மதத்தலைவர்கள் சொல்வதை விட வேறு யாரோ கூறுவதை மக்கள் நம்பக் கூடிய காலமாக இது மாறி விட்டது.
மதத் தலைவர்கள்; மதிப்பளிக்கப்பட வேண்டும்.

புத்த பெருமான் எந்த வேளையிலும் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்டு அவர் பெருமை பாராட்டவில்லை. இந்த நாட்டு மக்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரியும் நல்லிணக்கம் ஒற்றுமை சமாதானம் சமத்துவம் சகவாழ்வு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றார். உண்மையில் அது சிறந்த அழைப்புத்தான். அதனை நாம் ஏற்றுக் கொண்டு சமாதானத்திற்காகப் பாடுபடுவோம்.


SHARE

Author: verified_user

0 Comments: