வடக்கு முதல்வர் கிழக்கு வருகை. எழுக தமிழ் பேரணிக்கு 10 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும் வகையில் உரக்கக் குரல் கொடுப்பதே பிரகடனத்தின் நோக்கம்
இணைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா
தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை ஒருமித்த குரலில் உலகின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் ஓங்கி ஒலிக்கச் செய்வதே கிழக்கு எழுக தமிழ் பிரகடனத்தின் நோக்கம் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்புப் பிரதிநிதி தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.
பெப்ரவரி 10ஆம் திகதி மட்டக்களப்பில் பிரமாண்டமான முறையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியும் பிரகடனமும் குறித்து அவர் ஞாயிறன்று 05.02.2017 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து குறிப்பிட்ட அவர்@ அரசியல் கட்சி வேறுபாடுகளோ தமிழர் முஸ்லிம் என்ற இன மத வேறுபாடுகளோ இன்றி இந்நிகழ்வுகளில் எவரும் பங்குபற்றி சிறுபான்மையினரின் ஏகோபித்த குரலாக எழுக தமிழை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும் தான் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனின் மட்டக்களப்புக்கான வருகையோடு “எழுக தமிழ்” கிழக்குப் பிரகடனம் உலகறியச் செய்யப்படும்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்ததும் அங்கு காலை 11 மணிக்கு பொதுக் கூட்டமும் எழுக தமிழ் பிரகடனமும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகளில் தமிழ் முஸ்லிம் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் அணிதிரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்திருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈபிஆர்எல்எப் கட்சி சித்தார்த்தனை தலைமையாகக் கொண்ட புளொட் கட்சி, மேலும், கஜேந்திரகுமாரை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் மட்டக்களப்பு எழுக தமிழ் பேரணியில் பங்குபற்றுகின்றார்கள்.
மேலும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் எஸ். சிற்றம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் இருதய சத்திர சிகிச்சை நிபுணருமான பி. லக்ஸ்மன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள்.
பங்குனி மாதம் நடக்கவிருக்கின்ற மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கும்இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் பேசும் மக்கள் சொல்லப் போகின்ற செய்தியாக இந்த எழுக தமிழ் கிழக்குப் பிரகடனம் அமைந்திருக்கும்.
நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருக்கின்ற தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினைகள் உடனடியாக நிரந்தர அரசியல் தீர்வாக அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment