அரச துறைகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியாகப் பணம் பெறுவோரிடம் ஏமாற வேண்டாம் என கிழக்கு
மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
இந்த பண மோசடி ஏமாற்று விடயம் தொடர்பாக முதலமைச்சர் வியாழனன்று (05.01.2017) பொதுமக்களுக்கு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிக்கையில் மேலும், குறிப்பிட்டுள்ளதாவது@
அண்மைக்காலமாக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாய்கள் என்ற அளவில் பணம் பெற்றுக்கொண்டு சிலர் ஏமாற்றியுள்ளதும் அவர்களைப் பற்றிய முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதும் அறியக் கிடைத்துள்ளது.
மாகாண அரச நிருவாகத்தில் பணம் பெற்றுக் கொண்டு எவருக்கும் நியமனம் வழங்கப்படுவதில்லை.
கிழக்கு மாகாணத்தில் அரச தொழில்கள் தகைமை மற்றும் நியதிகளின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் ஒழுங்கு முறையாக மாத்திரமே வழங்கப்படுகின்றன.
இதில் கையூட்டல்களைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி தொழில் நியமனங்கள் வழங்கப்படுவதில்லை.
அவ்வாறு கையூட்டல்களை வழங்கி அரச நியமனங்களைப் பெறவோ அல்லது பெற்றுக் கொடுக்கவோ எவரும் காரணமாக இருந்து, அது நிரூபிக்கப்பட்டால் அத்தகைய மோசடிக்கார நபர்கள் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
தொழில் வாய்ப்புக்காக ஏங்குவோர் எந்த மோசடிக்கார நபரிடமும் பணங்களைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.
கடந்த காலங்களில் இவ்வாறு அரசியல் அதிகாரத்தில் இருந்த சிலர் நியமனங்களை வழங்குவதற்காக பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரிந்ததே.
அத்தகைய ஒரு மோசடி அரசியல் தொழில் வழங்கும் கலாசாரத்தை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இந்த முயற்சிக்கு அனைவரும் குறிப்பாக தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நபர்கள் தொழில்வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் கேட்கும் போது எந்த அமைச்சின் மூலமாக தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறுகிறார்களோ அந்த, நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று பணம் கேட்ட நபர் பற்றிய விவரங்களைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்த வேண்டும். என தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment